" நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு "
விளக்கம் :
வான்இன்று அமையாது ஒழுக்கு "
விளக்கம் :
எவ்வகையில் உயர்ந்தவரும் நீர் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது . அதுபோலத் தண்ணீரின் இடையறாத ஓட்டமும் மழை பெய்யவில்லை என்றால் இல்லையாகும்.
இந்த குறளுக்கும் நான் சொல்ல வரும் விசயத்துக்கும் நீங்களே முடிச்சு போட்டு கொண்டால் எனக்கு வசதிதான்.
இன்று காலை அலுவலகம் கிளம்பி வந்து எனது வாகனத்தை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அதை நிர்வகிக்கும் அம்மாவிடம் அன்றைய தினத்துக்கான கட்டணத்தை கொடுத்துக்கொண்டிருந்தேன். அதே சமயத்தில் ஒரு பெண் தனது வாகனத்தை நிறுத்திக்கொண்டிருந்தாள். பார்க்க அழகாக இலட்சணமாகத்தான் இருந்தாள். (வீட்ல சொல்லிடாதீங்க).
வண்டியை நிறுத்தியவுடன் அருகில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு பெண் குழந்தையின் அருகில் சென்று அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். அந்த பார்கிங்கை நிர்வகிக்கும் அம்மாவின் பேத்தியாக இருக்ககூடும். மேல்சட்டைகூட கூட அணியாமல் , தலை முடி கொஞ்சம் செம்பட்டையாக இருந்த அந்த குழந்தையிடம் அப்படி என்ன பேச இருக்கிறது என்று சிந்தித்தவாறே கடந்து வந்தேன்.
இப்படிதான் என்னைபோலவே நம்மில் பலரும் மனது ரசிக்கும் எதையுமே கண்டும் காணாமலும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இந்த பெண்ணை போன்ற மிகச்சிலரே வாழ்வில் கடந்து போகும் அனைத்து சின்ன சின்ன சந்தோசங்களையும் நின்று ரசித்து விட்டு கடந்து செல்கிறார்கள்.
இதே போல இன்னொரு சம்பவம். ஒரு நாள் அலுவலகம் விட்டு வீடு செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். எதேச்சையாக என் பார்வை திரும்பிய திசையில் ஒரு அழகான காட்சி. அங்கும் கூட அழகான பெண் தான்.(பரவாயில்லை விடுங்க நானே வீட்ல சொல்லிக்கிறேன்). பாதையில் சென்ற பூனை ஒன்றை மடியில் தூக்கி வைத்து அதன் முதுகில் தடவி கொண்டிருந்தாள். அந்த பூனையும் வாஞ்சையுடன் அவள் கைகளில் சுருண்டிருந்தது. திடீரெனெ ஏதோ ஞாபகம் வந்தவளாக தனது கைப்பையை திறந்து தனது லஞ்ச் பாக்ஸ் -ஐ வெளியிலெடுத்து அதிலிருந்து சிறிது தயிர் சாதத்தை எடுத்து பூனைக்கு வைத்தாள். அதுவும் நாக்கை சுழற்றி தின்று தீர்த்தது.
நம்மை சுற்றி இருக்கும் உலகம் மறந்து , அதன் கூரிய கண்களின் ஏளன பார்வையை எல்லாம் சட்டை செய்யாத , அந்த பெண்ணின் இந்த செய்கை என்னை வியப்பில் ஆழ்த்தியது. எல்லோருக்குள்ளும் இதைபோன்று மெல்லிய மனது உயிர்ப்புடனும் ரசனையுடனும் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் நினைப்பதை செயலாக்கி ரசித்து கடந்து செல்ல ஒரு தன்னிலை மறந்த நிலைக்கு தங்களை உட்படுத்த தயங்காத ஒரு சிலராலேயே முடியும். அதோடு இல்லாமல் அதற்கு ஒரு அசாத்தியமான தைரியமும் கூட வேண்டும்.
இந்த நிலைக்கு அல்லது ரசனைக்கு தங்களை உட்படுதிக்கொள்வதில் ஆண்களை விட பெண்களே சிறந்தவர்கள் என இந்த இரு பெண்களும் எனக்கு உணர்த்தி சென்றார்கள்.
ஒரு சிலரை கவனித்து இருக்கிறேன், பேருந்திலோ அல்லது ரயிலிலோ பயணிக்கும்போது கைகுழந்தைகள் சில சமயம் நம் முதுகு தொட்டு திருப்பும், அவர்கள் திரும்பி பார்த்து சிரித்து கூட வைக்காமல் வெற்றுபார்வை ஒன்றை வீசி விட்டு கொஞ்சம் நகர்ந்து நிற்பார்கள்.
இந்த சம்பவங்களை அசை போட்டுகொண்டு அலுவலக வாயிலை நெருங்கும் போது எங்கள் அலுவலக சுற்று சுவரின் அருகில் குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருமளவில் வீணாக பாதையில் வழிந்தோடி கொண்டிருந்தது . அந்த பாதை ஒரு சிற்றோடையாகவே மாறியிருந்தது. எல்லோரும் தங்கள் உடுப்பு நனையாமல் தூக்கி பிடித்துக்கொண்டு அலுவலகம் செல்லும் அவசரத்தில் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நானும் அவ்வாறே கடந்து என் அலுவலகம் வந்து இருக்கையில் அமர்ந்தேன்.
வந்து அமர்ந்ததும் முதல் வேலையாக பெங்களூர் மாநகர குடிநீர் வடிகால் வாரியத்தின் தொலைபேசி எண்ணை இணையத்தில் தேடி பிடித்து அவர்களை தொடர்பு கொண்டு முறையீடு பதிவு செய்தேன். சிறிது நேரம் கழித்து ஒருவர் என் கைபேசியில் அழைத்து விவரம் கேட்டார். சொல்லி முடித்ததும் ஆள் அனுப்பி சரி செய்கிறோம் என்றார்கள். அழைப்பை துண்டித்தவுடன் ஒரு ஆத்ம திருப்தியை உணர்தேன்.
நாம் எல்லோருமே இதையெல்லாம் கவனித்து சொல்ல யாரவது இருப்பார்கள் நம் வேலை இதுவல்ல என்று தான் ஒவ்வொரு நாளும் இதுபோன்ற நிகழ்வுகளை கண்டும் காணாமலும் கடந்து செல்கிறோம். இதே மன நிலையில் தான் எதோ ஒரு சாலை விபத்தின் போதும் கடந்து செல்கிறோம். குறைந்த பட்சம் ஆம்புலன்ஸ் அல்லது காவல் நிலையத்திற்கு தகவல் தருவது கூட யாராவது பார்த்து கொள்வார்கள் என்று நடையை கட்டுகிறோம்.
நம்பினால் நம்புங்கள் இந்த பதிவின் தலைப்பிற்கும் நான் இங்கே பகிர்ந்த விசயங்களுக்கும் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, இந்த திடீரென்ற சமூக அக்கறைக்கும்(Social Responsibility -ங்கோ), நான் ரசித்து கடந்து வந்த அந்த இரு பெண்மணிகளின் இரசனை மிகுந்த அந்த நிகழ்வுகளுக்கும் நிச்சயம் தொடர்பிருக்கிறது.
இன்னும் பேசலாம்!!
0 comments :
Post a Comment