குருகுலம் - என்னை செதுக்கிய சிற்பி

குறள் 102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது                                                
விளக்கம்
தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.

 

குருகுலத்தின் தொடர்ச்சியாக அய்யாவு அய்யாவை பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்து இதோ இப்போது எழுதுகிறேன. இன்னொரு குருகுலம்  போலவே அமைந்தது என்னுடைய அரவக்குறிச்சி பள்ளி வாழ்வும். 90-களின் ஆரம்பத்தில் 10-ஆம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால் First குரூப் (உயிரியல், கணிதம்) எடுத்து படிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் அரவக்குறிச்சி மேல்நிலைப்பள்ளியில் மட்டும் விதிவிலக்காக இயந்திரவியல்(Vocational Stream)  பாடபிரிவு முதன்மையானதாக இருந்தது.  அதற்கு காரணம் அய்யாவு அய்யா.

அரவக்குறிச்சி அரசு மேல்நிலை பள்ளியில் இயந்திரவியல் துறையின் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். சர்தார் வல்லபாய் படேலை  போன்ற  இரும்பு மனிதர் அய்யாவு அய்யா. அவருக்கென்று கொள்கைகளோடும் அதி மிகுந்த ஈடுபாட்டுடனும் பணியாற்றியவர். மிகவும் கண்டிப்பானவர். இன்றளவும் அவரை நினைக்கும் பொது ஒரு சின்ன பயமும் மரியாதையும் வந்து போவதில் ஆச்சர்யம் இல்லைதான்.

நான் படித்த காலகட்டத்தில் இரண்டு முறை மாநில அளவில் முதலாம் இரண்டாம் இடங்கள் 12ஆம் வகுப்பில் பெறுவதற்கு காரணமாக இருந்தார். பொறியியல் கல்லூரிகள் குறைவாக இருந்த அந்த கால கட்டத்தில் இவரிடம் படித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் முதலான நல்ல பொறியியல் கல்லூரியில் பயின்றனர்.

நான் அந்த பள்ளியில் சேர்ந்த முதல் நாள், மேல்நிலை முதலாம் ஆண்டு சேர்க்கை முடிந்து எல்லோரும் ஒரு பயத்துடனும் படபடப்புடனும் அமர்ந்திருந்தோம். என்னைபோலவே  நிறைய மாணவர்கள் வேறு பள்ளியில் இருந்து வந்திருந்தார்கள். மிடுக்கான நடையுடன் வந்தமர்ந்து வருகை பதிவை முடித்துவிட்டு முதல் வகுப்பை ஆரம்பித்தார். அய்யாவு அய்யாவின் முதல் வகுப்பு காலத்துக்கும் வழி காட்டும் பாடமாக இருந்தது..

பதின் பருவ மனது எப்படி எல்லாம் திசை மாறும். எதற்கெல்லாம் ஆசைப்படும். எப்படியெல்லாம் முடிவெடுக்கும். காட்டாற்று வெள்ளம் போன்ற நம் மனதை வென்று எப்படி கரை சேர வேண்டும் என்பதுதான் பாடம். உண்மையில் எங்களில் பலருக்கும் அந்த வகுப்பு ஒரு திருப்புமுனை என்றே சொல்வேன். அதை போன்ற பாடம் இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பலமுறை நினைத்திருக்கிறேன்.

உண்மையில் நாம் ஒழுக்கம் கெட்டு , பண்பு தவறி நம் வாழ்வை சீரழித்துக்கொள்ள நாம் ஒன்றும் மெனக்கெட தேவையில்லை. அதற்கான வாய்ப்புகள் எப்போதும் நம் வாயிற்கதவை தட்டிக்கொண்டே இருக்கும். நாம் அதை எப்படி கடந்து  செல்கிறோம் என்பதில் தான் நம் வாழ்வியல் பாடம் ஒளிந்திருக்கிறது என்று எங்களுக்கு உணர்த்தியவர் அய்யாவு அய்யா.

எங்களை சீர்படுத்திக்கொள்ள அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்கி கொடுத்தார். எங்கள் இயந்திரவியல் துறைக்கென்று தனியாக நூலகம் இருக்கும். அதில் எங்களின் பொது அறிவை  வளர்த்துக்கொள்ள கல்கண்டு , முத்தாரம் போன்ற தமிழ் சஞ்சிகைகளும் , Readers Digest, Wisdom போன்ற ஆங்கில இதழ்களும் ஒவ்வொரு மாதமும் வந்து சேரும். இன்னும் கூட இதையெல்லாம் அவர் சொந்த செலவில் செய்தாரா இல்லை பள்ளி நிதியிலிருந்து செய்தாரா என்று எனக்கு தெரியாது.

அது தவிர வேதாத்ரி மகரிஷியின் மன வளக்கலை மன்றத்தின் மூலமாக எல்லா மாணவர்களுக்கும் தியான வகுப்பு பள்ளியிலேயே வந்து பயிற்றுவிக்கவும் ஏற்பாடு செய்திருந்தார். இவையெல்லாம் எங்களின் படிப்பிற்கு துணைபுரிவதொடு நல்ல பண்பாளர்களாக உருவாக்கும் என்று நம்பினார்.

ஆண்டு இறுதி தேர்விற்கு முன்பாக ஒவ்வொரு மாணவ மாணவியரின் வீட்டிற்கு சென்று அவர்களின் பெற்றோரை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார். சின்ன குக்கிராமத்தில் மாணவர் வீடு இருந்தாலும் அந்த பகுதிக்கு பேருந்தில் சென்று பின் வாடகை மிதிவண்டியில் அந்த மாணவரின் வீடு சென்று பெற்றோரை சந்திப்பார். படிப்பில் அந்த மாணவன் எப்படி இருக்கிறான் என்பது பற்றியும, பெற்றோரின் பொறுப்பிலிருந்து அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு விளக்குவார். அப்படி ஒரு நாளில் அவர் என் வீட்டிற்கு வந்தபோது என் அம்மாவைதான் சந்திக்க முடிந்தது. நான் என்ன படிப்பு படித்து கொண்டிருக்கிறேன் என்று கூட சொல்ல தெரியாத என் தாயிடம் பொறுமையாக விளக்கிச்சென்றார் அய்யாவு அய்யா.

இன்றளவும் எனக்கு சின்ன வருத்தம். இவ்வளவு சிறப்பாக பணியாற்றிய உங்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைக்கவில்லை என்று. ஆனால் அதையெல்லாம் மிஞ்சியதாக உங்கள் மாணவர்களின் மனதில் இன்றும்  வாழ்கிறீர்கள் அய்யா.

இன்று நீங்கள் இவ்வுலகில் இல்லாவிட்டாலும் , இப்போதும் எங்களுடனிருந்து வழிநடத்துவதாகவே உணர்கிறேன். நீங்கள் எங்களை செதுக்கிய சிற்பி அய்யா.   உங்களால் நாங்கள் முழுமையானோம்.


                                                                                          தீபாவளி நல்வாழ்த்துக்களுடன்
                                                                                          பா.பாலகுமார்