Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

குருகுலம் - என்னை செதுக்கிய சிற்பி

குறள் 102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது                                                
விளக்கம்
தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.

 

குருகுலத்தின் தொடர்ச்சியாக அய்யாவு அய்யாவை பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்து இதோ இப்போது எழுதுகிறேன. இன்னொரு குருகுலம்  போலவே அமைந்தது என்னுடைய அரவக்குறிச்சி பள்ளி வாழ்வும். 90-களின் ஆரம்பத்தில் 10-ஆம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால் First குரூப் (உயிரியல், கணிதம்) எடுத்து படிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் அரவக்குறிச்சி மேல்நிலைப்பள்ளியில் மட்டும் விதிவிலக்காக இயந்திரவியல்(Vocational Stream)  பாடபிரிவு முதன்மையானதாக இருந்தது.  அதற்கு காரணம் அய்யாவு அய்யா.

அரவக்குறிச்சி அரசு மேல்நிலை பள்ளியில் இயந்திரவியல் துறையின் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். சர்தார் வல்லபாய் படேலை  போன்ற  இரும்பு மனிதர் அய்யாவு அய்யா. அவருக்கென்று கொள்கைகளோடும் அதி மிகுந்த ஈடுபாட்டுடனும் பணியாற்றியவர். மிகவும் கண்டிப்பானவர். இன்றளவும் அவரை நினைக்கும் பொது ஒரு சின்ன பயமும் மரியாதையும் வந்து போவதில் ஆச்சர்யம் இல்லைதான்.

நான் படித்த காலகட்டத்தில் இரண்டு முறை மாநில அளவில் முதலாம் இரண்டாம் இடங்கள் 12ஆம் வகுப்பில் பெறுவதற்கு காரணமாக இருந்தார். பொறியியல் கல்லூரிகள் குறைவாக இருந்த அந்த கால கட்டத்தில் இவரிடம் படித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் முதலான நல்ல பொறியியல் கல்லூரியில் பயின்றனர்.

நான் அந்த பள்ளியில் சேர்ந்த முதல் நாள், மேல்நிலை முதலாம் ஆண்டு சேர்க்கை முடிந்து எல்லோரும் ஒரு பயத்துடனும் படபடப்புடனும் அமர்ந்திருந்தோம். என்னைபோலவே  நிறைய மாணவர்கள் வேறு பள்ளியில் இருந்து வந்திருந்தார்கள். மிடுக்கான நடையுடன் வந்தமர்ந்து வருகை பதிவை முடித்துவிட்டு முதல் வகுப்பை ஆரம்பித்தார். அய்யாவு அய்யாவின் முதல் வகுப்பு காலத்துக்கும் வழி காட்டும் பாடமாக இருந்தது..

பதின் பருவ மனது எப்படி எல்லாம் திசை மாறும். எதற்கெல்லாம் ஆசைப்படும். எப்படியெல்லாம் முடிவெடுக்கும். காட்டாற்று வெள்ளம் போன்ற நம் மனதை வென்று எப்படி கரை சேர வேண்டும் என்பதுதான் பாடம். உண்மையில் எங்களில் பலருக்கும் அந்த வகுப்பு ஒரு திருப்புமுனை என்றே சொல்வேன். அதை போன்ற பாடம் இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பலமுறை நினைத்திருக்கிறேன்.

உண்மையில் நாம் ஒழுக்கம் கெட்டு , பண்பு தவறி நம் வாழ்வை சீரழித்துக்கொள்ள நாம் ஒன்றும் மெனக்கெட தேவையில்லை. அதற்கான வாய்ப்புகள் எப்போதும் நம் வாயிற்கதவை தட்டிக்கொண்டே இருக்கும். நாம் அதை எப்படி கடந்து  செல்கிறோம் என்பதில் தான் நம் வாழ்வியல் பாடம் ஒளிந்திருக்கிறது என்று எங்களுக்கு உணர்த்தியவர் அய்யாவு அய்யா.

எங்களை சீர்படுத்திக்கொள்ள அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்கி கொடுத்தார். எங்கள் இயந்திரவியல் துறைக்கென்று தனியாக நூலகம் இருக்கும். அதில் எங்களின் பொது அறிவை  வளர்த்துக்கொள்ள கல்கண்டு , முத்தாரம் போன்ற தமிழ் சஞ்சிகைகளும் , Readers Digest, Wisdom போன்ற ஆங்கில இதழ்களும் ஒவ்வொரு மாதமும் வந்து சேரும். இன்னும் கூட இதையெல்லாம் அவர் சொந்த செலவில் செய்தாரா இல்லை பள்ளி நிதியிலிருந்து செய்தாரா என்று எனக்கு தெரியாது.

அது தவிர வேதாத்ரி மகரிஷியின் மன வளக்கலை மன்றத்தின் மூலமாக எல்லா மாணவர்களுக்கும் தியான வகுப்பு பள்ளியிலேயே வந்து பயிற்றுவிக்கவும் ஏற்பாடு செய்திருந்தார். இவையெல்லாம் எங்களின் படிப்பிற்கு துணைபுரிவதொடு நல்ல பண்பாளர்களாக உருவாக்கும் என்று நம்பினார்.

ஆண்டு இறுதி தேர்விற்கு முன்பாக ஒவ்வொரு மாணவ மாணவியரின் வீட்டிற்கு சென்று அவர்களின் பெற்றோரை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார். சின்ன குக்கிராமத்தில் மாணவர் வீடு இருந்தாலும் அந்த பகுதிக்கு பேருந்தில் சென்று பின் வாடகை மிதிவண்டியில் அந்த மாணவரின் வீடு சென்று பெற்றோரை சந்திப்பார். படிப்பில் அந்த மாணவன் எப்படி இருக்கிறான் என்பது பற்றியும, பெற்றோரின் பொறுப்பிலிருந்து அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு விளக்குவார். அப்படி ஒரு நாளில் அவர் என் வீட்டிற்கு வந்தபோது என் அம்மாவைதான் சந்திக்க முடிந்தது. நான் என்ன படிப்பு படித்து கொண்டிருக்கிறேன் என்று கூட சொல்ல தெரியாத என் தாயிடம் பொறுமையாக விளக்கிச்சென்றார் அய்யாவு அய்யா.

இன்றளவும் எனக்கு சின்ன வருத்தம். இவ்வளவு சிறப்பாக பணியாற்றிய உங்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைக்கவில்லை என்று. ஆனால் அதையெல்லாம் மிஞ்சியதாக உங்கள் மாணவர்களின் மனதில் இன்றும்  வாழ்கிறீர்கள் அய்யா.

இன்று நீங்கள் இவ்வுலகில் இல்லாவிட்டாலும் , இப்போதும் எங்களுடனிருந்து வழிநடத்துவதாகவே உணர்கிறேன். நீங்கள் எங்களை செதுக்கிய சிற்பி அய்யா.   உங்களால் நாங்கள் முழுமையானோம்.


                                                                                          தீபாவளி நல்வாழ்த்துக்களுடன்
                                                                                          பா.பாலகுமார்
   
 

நீரின்றி அமையாது உலகு!!

" நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு " 



விளக்கம் :
                       எவ்வகையில் உயர்ந்தவரும் நீர் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது . அதுபோலத் தண்ணீரின் இடையறாத ஓட்டமும் மழை பெய்யவில்லை என்றால் இல்லையாகும்.
 
 
 
இந்த குறளுக்கும் நான் சொல்ல வரும் விசயத்துக்கும் நீங்களே முடிச்சு போட்டு கொண்டால் எனக்கு வசதிதான்.
 
இன்று காலை அலுவலகம் கிளம்பி வந்து எனது வாகனத்தை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அதை நிர்வகிக்கும் அம்மாவிடம் அன்றைய தினத்துக்கான கட்டணத்தை கொடுத்துக்கொண்டிருந்தேன். அதே சமயத்தில்  ஒரு பெண் தனது வாகனத்தை நிறுத்திக்கொண்டிருந்தாள். பார்க்க அழகாக இலட்சணமாகத்தான் இருந்தாள். (வீட்ல சொல்லிடாதீங்க).  
 
வண்டியை நிறுத்தியவுடன் அருகில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு பெண் குழந்தையின் அருகில் சென்று அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். அந்த பார்கிங்கை நிர்வகிக்கும் அம்மாவின் பேத்தியாக இருக்ககூடும்.  மேல்சட்டைகூட கூட அணியாமல் , தலை முடி கொஞ்சம் செம்பட்டையாக  இருந்த அந்த குழந்தையிடம் அப்படி என்ன பேச இருக்கிறது என்று சிந்தித்தவாறே கடந்து வந்தேன்.
 
இப்படிதான் என்னைபோலவே நம்மில் பலரும் மனது ரசிக்கும் எதையுமே கண்டும் காணாமலும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இந்த பெண்ணை போன்ற  மிகச்சிலரே வாழ்வில் கடந்து போகும் அனைத்து சின்ன சின்ன சந்தோசங்களையும் நின்று ரசித்து விட்டு கடந்து செல்கிறார்கள். 
 
இதே போல இன்னொரு சம்பவம். ஒரு நாள் அலுவலகம் விட்டு வீடு செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். எதேச்சையாக என் பார்வை திரும்பிய  திசையில் ஒரு அழகான காட்சி. அங்கும் கூட அழகான பெண் தான்.(பரவாயில்லை விடுங்க நானே வீட்ல சொல்லிக்கிறேன்). பாதையில் சென்ற பூனை ஒன்றை மடியில் தூக்கி வைத்து அதன் முதுகில் தடவி கொண்டிருந்தாள். அந்த பூனையும் வாஞ்சையுடன் அவள் கைகளில் சுருண்டிருந்தது.  திடீரெனெ ஏதோ ஞாபகம் வந்தவளாக தனது கைப்பையை திறந்து தனது லஞ்ச் பாக்ஸ் -ஐ வெளியிலெடுத்து அதிலிருந்து சிறிது தயிர் சாதத்தை எடுத்து பூனைக்கு வைத்தாள். அதுவும் நாக்கை சுழற்றி தின்று தீர்த்தது.
 
நம்மை சுற்றி இருக்கும் உலகம் மறந்து , அதன் கூரிய கண்களின் ஏளன பார்வையை எல்லாம் சட்டை செய்யாத , அந்த பெண்ணின் இந்த செய்கை என்னை வியப்பில் ஆழ்த்தியது.  எல்லோருக்குள்ளும் இதைபோன்று மெல்லிய மனது உயிர்ப்புடனும் ரசனையுடனும் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் நினைப்பதை செயலாக்கி ரசித்து கடந்து செல்ல ஒரு தன்னிலை மறந்த  நிலைக்கு தங்களை உட்படுத்த தயங்காத ஒரு சிலராலேயே முடியும். அதோடு இல்லாமல் அதற்கு ஒரு அசாத்தியமான தைரியமும் கூட வேண்டும்.
 
இந்த நிலைக்கு அல்லது ரசனைக்கு தங்களை உட்படுதிக்கொள்வதில் ஆண்களை  விட பெண்களே சிறந்தவர்கள் என இந்த இரு பெண்களும் எனக்கு உணர்த்தி சென்றார்கள்.
 
ஒரு சிலரை கவனித்து இருக்கிறேன், பேருந்திலோ அல்லது ரயிலிலோ பயணிக்கும்போது கைகுழந்தைகள் சில சமயம் நம் முதுகு தொட்டு திருப்பும், அவர்கள் திரும்பி பார்த்து சிரித்து கூட வைக்காமல் வெற்றுபார்வை ஒன்றை வீசி விட்டு கொஞ்சம்  நகர்ந்து நிற்பார்கள்.    
 
இந்த சம்பவங்களை அசை போட்டுகொண்டு  அலுவலக வாயிலை நெருங்கும் போது எங்கள் அலுவலக சுற்று சுவரின் அருகில்  குடிநீர் செல்லும் குழாயில்  உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருமளவில் வீணாக பாதையில் வழிந்தோடி கொண்டிருந்தது . அந்த பாதை ஒரு சிற்றோடையாகவே  மாறியிருந்தது. எல்லோரும் தங்கள் உடுப்பு நனையாமல் தூக்கி பிடித்துக்கொண்டு அலுவலகம் செல்லும் அவசரத்தில் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நானும் அவ்வாறே கடந்து என் அலுவலகம் வந்து இருக்கையில் அமர்ந்தேன்.
 
வந்து அமர்ந்ததும் முதல்  வேலையாக பெங்களூர் மாநகர குடிநீர் வடிகால் வாரியத்தின்  தொலைபேசி எண்ணை இணையத்தில் தேடி பிடித்து அவர்களை தொடர்பு கொண்டு முறையீடு பதிவு செய்தேன். சிறிது நேரம் கழித்து  ஒருவர் என் கைபேசியில் அழைத்து விவரம் கேட்டார். சொல்லி முடித்ததும் ஆள் அனுப்பி சரி செய்கிறோம் என்றார்கள். அழைப்பை துண்டித்தவுடன்  ஒரு ஆத்ம திருப்தியை உணர்தேன்.
 
நாம் எல்லோருமே  இதையெல்லாம் கவனித்து சொல்ல யாரவது இருப்பார்கள் நம் வேலை  இதுவல்ல என்று தான் ஒவ்வொரு நாளும் இதுபோன்ற நிகழ்வுகளை கண்டும் காணாமலும் கடந்து செல்கிறோம்.  இதே மன நிலையில் தான் எதோ ஒரு சாலை  விபத்தின் போதும் கடந்து செல்கிறோம். குறைந்த பட்சம் ஆம்புலன்ஸ் அல்லது காவல் நிலையத்திற்கு தகவல் தருவது கூட யாராவது பார்த்து கொள்வார்கள் என்று நடையை கட்டுகிறோம்.    
 
நம்பினால் நம்புங்கள் இந்த பதிவின் தலைப்பிற்கும் நான் இங்கே பகிர்ந்த விசயங்களுக்கும்  சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, இந்த திடீரென்ற  சமூக அக்கறைக்கும்(Social Responsibility -ங்கோ),   நான் ரசித்து கடந்து வந்த அந்த இரு பெண்மணிகளின் இரசனை மிகுந்த அந்த நிகழ்வுகளுக்கும் நிச்சயம் தொடர்பிருக்கிறது.
 
                                                                                              இன்னும் பேசலாம்!!
 

எதிர்பாட்டு


சில சமயங்களில் சின்ன சின்ன சம்பவங்கள் கூட மறக்க முடியாத நினைவுகளாகி விடும்.
அதுவும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு, நட்சத்திரங்கள் வானில் சிதறி கிடப்பது  போல எண்ணிலடங்கா நினைவுகள் சிதறுண்டு  கிடக்கும். என்னுடைய ஊர் திண்டுக்கல் மாவட்டத்தில்  பொன்னம்பட்டி என்ற குக்கிராமம்.  எல்லோரும் ஏதோ ஒரு வகையில் சொந்தங்களாக இருப்பார்கள். எதிர்படுபவர்களை மாமாயி(மாமா),  அண்ணா, சின்னாயி(சித்தி), பெத்தியா(பெரியப்பா) என்று உறவு சொல்லி அழைத்து இரண்டு நிமிடங்கள் நின்று  பேசாமல் போக முடியாது. வீடுகளில் எல்லாம் தெலுங்கு தான் பேசுவார்கள். எங்கள் தலை முறையில் தான் தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக
ஆட்கொண்டு விட்டது.

நிறைய பண்ணையகாரர்களும் பண்ணையங்களும் எங்கள் ஊரில் இருந்த காலம்.
சுமாராக 80க்கும் 90க்கும் இடைப்பட்ட காலம். ஒவ்வொரு பெரிய பண்ணயதிற்கும் பண்ணையாள் ஒருவர் வேலைக்கு இருப்பார். ஒரு சில
பெரிய பண்ணையங்களில் பண்ணையாளை  குடும்பத்துடன் வேலைக்கு
அமர்த்தியிருப்பார்கள். தோட்டங்களிலேயே பண்ணையாட்களின் குடும்பத்திற்கு வீடு இருக்கும்.

கிட்டத்தட்ட முழுநேர (24/7) வேலைதான். பகலில் ஆடு மாடுகளை மேய்த்து
பட்டியில் அடைத்து விட்டு இரவு தோட்டத்தில் தண்ணீர்  பாய்ச்சுவார்கள். நள்ளிரவு தாண்டி பின்னிரவு நேரங்களில் தான் பம்பு செட்களுக்கான  3 phase மின்சாரம் இருக்கும் என்பதால் அதுவே அந்த வேலைக்கான  சரியான தருணமாக இருந்தது.


பின்னிரவு நேரங்கள் தான் எல்லோரும் அயர்ந்து தூங்கும்  நேரம்.  இந்த நேரங்களில் தனியே  விழித்து வேலை செய்வது என்பது ஒரு தண்டனை தான். சின்னதாக சரக் என்று சத்தம் கேட்டாலும் உயிர்  போய் உயிர் வரும் .
பாம்பாக இருக்குமோ இல்லை வேலியில் மேயும் ஒடக்கானாக இருக்குமோ என்று மனது அச்சப்பட்டு பின் ஆறுதல் சொல்லிக்கொள்ளும் .
சின்ன வயது முதல் கேட்டு படித்து  நம்பிய நம்பாத பேய் கதைகளெல்லாம் ஞாபகத்தில் வந்து பயமுறுத்தும் . தூக்கமும்  வந்து  கண்ணை  கட்டும்.

இந்த பயத்தையும் தூக்கத்தையும் விரட்டி அடிக்க இந்த பண்ணை ஆட்கள்
கையாண்ட யுக்தி என்னை மிகவும் கவர்ந்தது. பக்கத்து பக்கத்து தோட்டங்களில் தண்ணீர் பாய்ச்சும் இருவர் சேர்ந்து கொண்டு பாடல்கள் பாடி அசத்துவார்கள். பக்கத்து தோட்டம் என்றால் அரை கிலோமீட்டர் முதல்
ஒரு கிலோமீட்டர் இடைவெளி இருக்கும்.

ஒருவர் இங்கிருந்து பாட அதைகேட்டு இன்னொருவர் எதிர்பாட்டு பாடுவார். திரைப்பட பாடல்களும் சில நேரம் மேடை நாடக பாடல்களும் எடுத்து விடுவர்.
உற்று கேட்டால் இருவரின் பாடல்களிலும் நையாண்டியும்  நக்கலும் ஒளிந்து இருக்கும்.  நேரம் ஆக ஆக அந்த பாடல்களில் இவர்களின் சொந்த மெட்டுகளும் வரிகளும் கலந்து  கேலி பேசும். அவர்களின் தூக்கம் விரட்டி நம் தூக்கத்தையும் கலைத்து விடுவார்கள்.

காலபோக்கில் விவசாயமும் நலிந்து  பண்ணையாட்களும் நகரப் பணி தேடி ஓடியதில் இதை நான் கதையாக சொல்ல வேண்டிய நிர்பந்தம்.

இன்னும் பேசலாம் .... 

சார் போஸ்ட்

தொழில்நுட்பத்தின் உதவியால் உலகம் இப்போது நம் உள்ளங்கைக்குள்.  எப்போதுமே அவசரகதியில் இயங்கிகொண்டிருக்கிற உலகத்தில் நாமும் நிற்காமல் ஓடிகொண்டே இருக்கிறோம். ஒன்றை கவனித்தீர்களா எந்த காலகட்டத்தில் நாம் இருந்தாலும் ஒரு இருபது வருடங்கள் பின்னோக்கி பயணபட்டால் மனது லேசாகிவிடும். உள்ளம் பரவசமடைந்து அது ஒரு வசந்தகாலம் என்று சொல்ல தோன்றும். இப்போது மட்டுமல்ல நம் பெரியவர்களும் இதையேதான் சொல்ல கேட்டிருப்போம். அவர்கள்  வாழ்ந்த  காலத்தை நினைத்து  பெருமூச்சு விட்டதை கவனித்திருப்போம் . அப்படியானால் காலச்சூழலில் நம் சந்தோசங்களை தொலைத்துக்கொண்டுதான் ஓடிக்கொண்டே இருக்கிறோமா?

அப்படி காலபோக்கில் மறைந்து போன ஒன்றுதான் கடிதம்.
நீங்கள் கடைசியாக எப்போது கடிதம் எழுதினீர்கள்  நினைவிருக்கிறதா? இன்றெல்லாம் கடிதம் எழுதுவது முற்றிலும் குறைந்து அலுவல் நிமித்தமாக மட்டும் என்றளவில் ஆகிவிட்டது. என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்து தொலைபேசி, கைபேசி போன்ற தொடர்பு சாதனங்கள் கடிதத்திற்கான தேவையை குறைத்திருந்தாலும், ஒரு பழைய கடிதத்தை படிக்க கிடைக்கும் சந்தோசத்தை அது தர முடியுமா? ஒரு பேரன் தன் தாத்தாவுக்கு தப்பு தப்பாக எழுதிய கடிதத்தை கற்பனை செய்து பாருங்கள்!.



பொங்கல் பண்டிகையின் போது பகிர்ந்து கொண்ட வாழ்த்து அட்டைகள் நினைவிருக்கிறதா உங்களுக்கு? எவ்வளவு சந்தோசமான தருணங்கள் அவை!. இப்போது அதை காண முடிகிறதா? கைபேசியில் அனுப்பும் குறுஞ்செய்தியோடு முடிந்துவிடுகிறது பொங்கல் நாட்கள்.



நான் சிருவனாக இருந்தபோது என் இரண்டு அண்ணன்களும் பணி
நிமித்தமாக வெளி மாநிலங்களில் இருந்தார்கள். அவர்கள் எழுதிய
கடிதங்கள் அனைத்தும் ஒரு கொக்கியில் மாட்டப்பட்டிருக்கும்.
வருடம் ஒரு முறை தான் அவர்கள் ஊர் வர இயலும்.
என் பெரியண்ணா ஊர் வரும் முன்னர் எழுதும் கடிதங்களில்
என் அம்மாவுக்கு ஒரு சிறு குறிப்பு எழுதுவார். அதில் அவருக்கு பிடித்த
உணவு வகைகளை பட்டியலிட்டு ஊர் வரும்போது செய்து தருமாறு கேட்டிருப்பார். அந்த கடிதங்கள் தந்த சந்தோசங்கள் காலத்திற்கும்
மிச்சமிருக்கும்.  

பக்கத்து வீட்டு பெரியப்பா , எதிர் வீட்டு பாட்டி , கோடி வீட்டு மாமா இவர்கள் எல்லோரையும் விசாரித்து எழுதி இருப்பார். உண்மையில் அந்த கடிதங்களுக்கு உயிர் இருந்ததை என்னால்
உணர முடிந்தது. மாடு கன்றுகுட்டி ஈன்ற செய்திமுதல்
மல்லிகா அக்கா சீமந்தசெய்தி வரை கடிதங்கள் தாங்கி  சென்ற விசயங்கள் ஏராளம்.

எப்போது கடிதம் எழுதினாலும் நான் எழுதுவதற்கென்று ஒரு அரை பக்கம் மீதம் வைத்திருப்பார் என் அப்பா. கடிதத்தை மடிப்பதற்கு என்று
இருக்கும் பகுதியிலெல்லாம் கூட எழுதுவதற்கு விசயம் இருக்கும்.   

ஒரு சிலருக்கு கடிதங்கள் எழுதிகொடுத்த அனுபவமும் , படித்துகாட்டிய அனுபவமும் எனக்குண்டு. அப்படி நான் எழுதி கொடுத்த கடிதங்கள் யார் வீட்டு பரணிலாவது பத்திரம் ஆகியிருக்குமா? . அது யாருக்காவது செல்லரித்துபோன நினைவுகளை மீட்டு தந்திருக்குமா? அந்த கடிதங்கள் இன்று என்ன நிலைமையில் இருக்கும்? கற்பனைக்கு எட்டாத கேள்விகள் தான்.

என் நெருங்கிய நண்பர் ஒருவர் எனக்கு ஒரு முறை ஒரு நீண்ட கடிதம்
எழுதியிருந்தார்.  ஆனால் அவர் அதை அனுப்பியிருக்கவில்லை. ஒருமுறை எதேச்சையாக சந்திக்க நேர்ந்தபோது , உனக்கு ஒரு கடிதம்
எழுதிகொண்டிருந்தேன் என்றார். ஆர்வமிகுதியில் தாருங்கள் என்று
வாங்கி பார்த்தேன். ஐந்து பக்கங்கள் எழுதி முடித்துவிட்டு இன்னும்
எழுதுவதற்காக வைத்திருந்தார். அருமையான ஒரு பயணம் போன்ற
அனுபவத்தை தரும் கடிதம் அது.கையோடு வாங்கிவந்து இன்னும்
பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

எவ்வளவு உணர்ச்சிகளையும், மனதின் வெளிப்பாடுகளையும் கொண்டு
சேர்த்திருக்கிறது இந்த கடிதங்கள். கடிதங்கள் போல நம்
எண்ணங்களை அப்படியே  கொண்டு சேர்க்க வேறெதுவும் இருப்பதாய்
எனக்கு தோன்றவில்லை.

கடிதங்களுக்கு   இப்போது கல்லறை கட்டப்பட்டுவிட்டது. கண்ணீரோடு போய்வா என்று சொல்வதை தவிர வேறொன்றும் எனக்கு தெரியவில்லை. நீ இன்னொரு பிறவி எடுத்துவருவாய்
என்று என் மனம் மட்டும் ஏனோ இன்னும் நம்பிக் கொண்டிருகிறது.
வருவாயா???    

                                                                              வருவாய் என்ற நம்பிக்கையோடு
                                                                               பாலகுமாரன்
                                                                               22/12/2012





 

குருகுலம்

நண்பர்களே ,

இதோ என் முதல் பதிவு என் குருவிற்காக!!

ஒரு ஞாயிற்றுக் கிழமை  அதிகாலை 5.30 மணி இருக்கும். எனது தூக்கம் கலைந்திருந்தது. புரண்டு படுத்து  திரும்ப தூங்க முயன்று தோற்று போனேன். மனது எங்கோ பின்னோக்கி பறந்து ...........ஒரு நிமிடம்!!,  எப்படி நம் மனது ஒரு இசைதட்டில் பொதிந்திருக்கும ஒரு பாடலை தேர்வு செய்து இசைப்பது போல எதையாவது ஒன்றை நம் நினைவுகளிலிருந்து தேர்ந்த்தெடுத்து  அசை போடுகிறது நம் அனுமதி இல்லாமல்!! அப்படித்தான் என் எண்ணங்கள் எனது ஆசிரியர் சுகுமார்  (எ) சுந்தர்ராஜனை
பற்றி அசை போட்டு கொண்டு இருந்தது. இதோ எழுந்து உட்கார்ந்து எழுத ஆரம்பித்துவிட்டேன்.

அவரை எப்படி அறிமுகப்படுத்துவது. அவர் எங்களது பள்ளி ஆசிரியர் அல்ல.
நான் ஓன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படித்தபோது எங்களுக்கு   டியூஷன் எடுத்தார்.
சுகுமார் சார்  ஒரு வித்தியாசமான மனிதர் . அவர் பிறப்பால் ஒரு பிராமணர். எப்போதும் ஜாலியாக இருப்பார். கண்களுக்கு Ray-Ban கண்ணாடி அணிந்து  ஸ்டைலாக வலம்வருவார். கமலஹாசனின் பரம விசிறி.
தேவர்மகன் திரைப்படம் வந்த போது அவர் கமல் போல மீசைவைத்திருந்தார்.
பின் அதுவே அவரின் அடையாளமானது. அவரின் சுறுசுறுப்பிற்கு
இணையாக இன்றுவரை என்னால் யாரையும ஒப்பிட முடியவில்லை.
பள்ளிக்கு கூட போக பிடிக்காமல் இருந்தது உண்டு. ஆனால் ஓருபோதும் டியூஷனுக்கு  மட்டம் போட  நினைத்ததில்லை.

1990 க்கும் 1993 க்கும் இடைப்பட்ட காலம் அது. கிட்டத்தட்ட குருகுலம் போன்று தான்  இருந்தது நங்கள் அவரிடம் படித்தது. நாங்கள் பள்ளியில் இருந்த நேரத்தை விட டியூஷன் சென்டரில் இருந்த
நேரம் தான் அதிகம். அவரிடம் தான் கமலஹாசனை ரசிக்க கற்றுக்கொண்டேன். கிரிக்கெட் விளையாட கற்றுக்கொண்டேன்
பைக் ஓட்ட கற்றுக்கொண்டேன்.

விளையாட்டு போலவேதான் இருந்தது எங்களது படிப்பு. நிறைய பெற்றோர்களுக்கு நங்கள் எங்கே உருப்பட போகிறோம் என்ற கவலை கூட இருந்தது. ஏனென்றால் சுகுமார் சீட்டு ஆடுவார் , சிகரெட் புகைப்பார். கிரிக்கெட் மீது  பைத்தியம்.  நடந்து போகும் போதுகூட காதில் ரேடியோ வைத்து கிரிக்கெட்  கமெண்ட்ரி கேட்டு கொண்டு போவார். ஆனால் ஒருபோதும் எங்களின் ஒழுக்ககேட்டை சகித்து கொண்டதில்லை.

அவர் ஒரு  பள்ளியில்(அய்யம்பட்டி) சத்துணவு ஆசிரியராகவும் பணியாற்றினார். சனி ஞாயிறு -களில் அந்த பள்ளியில் தான் எங்களது டியூஷன். மதியம் வரை பாடம் இருக்கும். பின்னர் மாலை முழுவதும் விளையாட்டுதான்   பாரதி சொல்லி வைத்தது போல. கிரிக்கெட், குண்டு விளையாடுதல் , கிணற்றில் நீச்சல் அடித்தல் . பின் எப்படி கசக்கும் இந்த டியூஷன். இதோ என் நண்பர்களை நினைவுகூற ஒரு சந்தர்ப்பம். அய்யம்பட்டி செல்வம்,  ரேணு கோபால், செம்பாறை விசு , MP பழனிச்சாமி, நாகராஜ், வடகம்பாடி ரமேஷ் . சீனியர் செட்டில் விசு , முத்துசாமி , பொன்னாமலை  இன்னும் பலர்.

முழு ஆண்டு தேர்வு நெருங்கும்போது அவர் வீட்டில்(நொச்சிப்பட்டி)  நைட் ஸ்டடியும் இருக்கும். சைக்கிளில் சென்றுவிட்டு
காலையில் தான் திரும்புவோம்.
இரவு படித்து முடித்து விட்டு ஈசனத்தம் (அருகில் இருக்கும் சின்ன டவுன் ) டெண்டில் இரவுக்காட்சி  சினிமா கூட  பார்த்ததுண்டு. அங்கிருந்து 6 கிலோமீட்டர் சைக்கிளில் சென்று வருவோம். இப்போது சொல்லுங்கள்  எங்களது பெற்றோர்களிடம் இருந்த பயம் நியாயம் தானே.

அதற்காக நாங்கள் படிக்காமல் இருந்து விடவில்லை.
நாங்கள் படித்தது ஒரு அரசினர் பள்ளியில்(R வெள்ளோடு). எனக்கு தெரிந்து ஒரு வருடம் 10th ரிசல்ட்-ல்  வாஷ் அவுட் ஆனது கூட உண்டு. அந்த காலகட்டத்தில் அந்த நிலைமையிலிருந்து பள்ளியை
மீட்டெடுத்தவர் சுகுமார் சார் தான்.
மாற்று கருத்து இருந்தால் மன்னிக்கவும்.

டியூஷன் என்றால் ஏதோ கணிதம் ஆங்கிலம் மாத்திரம் அல்ல. எல்லா பாடங்களுக்கும் அவர்தான். கடைசிவரை அவர் என்ன படித்திருந்தார் என்று எங்களுக்கு(எனக்கு) தெரியாது. அவர் ஒரு சகலகலா மேதாவி.
அன்று நடத்தியவரை வினாடிவினா இருக்கும். கிட்டத்தட்ட அது ஒரு பெரிய போர்க்களம் போல தான் இருக்கும். இரண்டு குழுவாக பிரித்து கரும்பலகையில் மதிப்பெண் இடுவார். வெற்றி பெறுபவர்களுக்கு பேனா , பென்சில் என்று எதாவது பரிசளிப்பார்.  ஒன்று சொல்ல ஆசை படுகிறேன்.
அவருக்கு கற்றுதருதலில் கண்டிப்பாக ஒரு காதல் இருந்தது.

மாலையில்  R .வெள்ளோடு பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் ஆடுவோம். அவரும் எங்களுடன் சேர்ந்து ஆடுவார். அவருடன் சேர்ந்து நிறைய கிரிக்கெட் பார்த்ததும் உண்டு.
இதற்காகவே அவர் வீட்டில் டிஷ் ஆண்டெனா இருந்தது. ஊருக்கு ஒரு தொலைகாட்சி இருந்த காலம் அது.

பத்தாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வுக்கு நாங்கள் குஜிலியம்பாறை 15 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் இன்னொரு பள்ளிக்கு சென்று தேர்வு எழுதவேண்டும்.
எல்லா தேர்விற்கும் எங்களுடன் வருவார். கடைசி நிமிட படிப்புக்கு உறுதுணையாக இருப்பார். 

தேர்வுக்கு இடையே அவருக்கு ஆன சிறிய விபத்தால் கணித தேர்விலிருந்து
அவரால் எங்களுடன்  வர இயலவில்லை. கணித தேர்வு முடித்ததும் அவரை  வீட்டில் சென்று பார்த்தோம். எல்லா தேர்வுகளையும் எழுதி முடித்துவிட்டு முடிவுகளுக்காக காத்திருந்தோம்.

அந்த நாளும் வந்தது. அப்போதெல்லாம் மாலைமலர் அல்லது மாலைமுரசு
நாளிதழில் தான்தேர்வு முடிவுகள் வெளியாகும்.
சுகுமார் சாரின் உழைப்பு வீண்போகவில்லை. முடிவுகள் வந்தபோது 90 விழுக்காடுக்கு மேல் தேர்வாகி இருந்தார்கள்.இருவர் மட்டும் தேர்வாகவில்லை. அவர்களிருவரும் இவரிடம் படிக்கவில்லை.

மறுநாள் தலைமை ஆசிரியர் மதிப்பெண் அறிவித்தார். முதல் மதிப்பெண் 403  என்றும் கணிதத்தில் ஒருவர்  100 க்கு 100 மதிப்பெண் என்றும் சொன்னார்.
அந்த இரண்டையும் பெற்றது நான் தான் என்பதை அறிந்தபோது அளவற்ற மகிழ்ச்சி.

கணிதத்தில் நிறைய பேர் ஓரிரு மதிபெண்ணில் சென்டம்(முழுமை)  தவற
விட்டிருந்தினர். சுகுமார் சார் சந்தோஷத்தில் திளைத்தார். இதிலென்ன சாதனை இருக்கிறது? உங்கள் கேள்வி நியாயமானதுதான். 30 ஆண்டு கால பள்ளி வரலாற்றில் இது போன்ற ரிசல்ட் அதுவே முதல் முறை.
இவர்கள் எங்கே உருப்பட போகிறார்கள் என்றவர்களின் முன்னால் காலரை தூக்கிவிட்டு கொண்டு நடந்தோம்.

எங்கள் முன் எந்த லட்சியமும் முன்னிருத்தபடவில்லை. உண்மையை சொல்ல போனால் தேர்வு எழுதி முடிக்கும் வரை 100 எடுப்பேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை நான் . சத்தியமாய் சொல்கிறேன் சுகுமார் சார், இது நீங்கள் எடுத்த மதிப்பெண்.

அடுத்தடுத்த ஆண்டுகளிலும் அதை விட நல்ல ரிசல்ட் தந்து ஆச்சரியப்படுத்தினார். வேறு பள்ளிக்கு நான் சென்று விட்டாலும் நேரம் கிடைக்கும்போது சென்று
அவருடன் கிரிக்கெட்  ஆடுவேன்.

இவ்வளவு வெற்றியை தந்த அவருக்கு எதாவது செய்ய வேண்டும் என்று
நினைத்த போது  கூட என் நினைவிற்கு வந்தது சிகரெட் தான். ஒரு நாள் R.வெள்ளோடு பள்ளி மைதானத்தில் கிரிக்கெட்
ஆடிகொண்டிருந்தபோது  ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கிவந்து கொடுத்தேன். முகமலர்ச்சியுடன்
ஏற்று கொண்டார்.

அவரின் ஆயுளை குறைத்ததில் எனக்கும் ஒரு துளி அளவாவது
பங்கு உண்டு என்பதை   உணர்ந்தபோது மனது வலித்தது. ஆம் ஒரு தேனீ போன்ற சுறுசுறுப்புடன் சுற்றிக்கொண்டு இருந்த சுகுமார் சார் இனி இல்லை
என்று என் நண்பர்கள் சொல்ல கேட்ட போது உடைந்து விட்டேன்.
2010 -ஆம் வருடம்  ஒரு பிப்ரவரி நாளில் அவரை காலன் அழைத்துகொண்டான். இடைவிடாத புகைபழக்கம் அவரை இவ்வளவு சீக்கிரம் பிரித்துவிடும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.

கொஞ்ச நாள் கழித்து  நானும் செல்வமும் சென்று சுகுமார் சாரின் தாயார் ,
மற்றும் துணைவியாரை பார்த்துவர சென்றோம். அழுதுகொண்டே பேசிய அந்த தாய்க்கு சமாதனம் சொல்ல எங்களிடம்
வார்த்தைகள்  இல்லை. அங்கு மௌனம் மட்டும் தான் எங்கள் மொழியானது.

இன்னும் கூட நீங்கள் இந்த உலகத்தில் இல்லை என்பதை மனது ஒரு தயக்கத்துடனே தான் ஏற்று கொள்கிறது.

எனக்கு கடவுள் நம்பிக்கை குறைவு என்றாலும் உங்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் குருவே!!!

கமல்ஹாசனின் ஒரு நல்ல படம் பார்க்கும்போதும் , இந்தியா கிரிக்கெட்டில் உலக கோப்பையை வென்ற போதும் உங்கள் முகம் மின்னல் போல் ஒரு நொடி வந்து போகாமலில்லை..
                                                                                                                  
                                                                                      என்றும் உங்கள்  நினைவுகளுடன்
                                                                                      பாலகுமாரன்
                                                                                      30/09/2012








.