சார் போஸ்ட்

தொழில்நுட்பத்தின் உதவியால் உலகம் இப்போது நம் உள்ளங்கைக்குள்.  எப்போதுமே அவசரகதியில் இயங்கிகொண்டிருக்கிற உலகத்தில் நாமும் நிற்காமல் ஓடிகொண்டே இருக்கிறோம். ஒன்றை கவனித்தீர்களா எந்த காலகட்டத்தில் நாம் இருந்தாலும் ஒரு இருபது வருடங்கள் பின்னோக்கி பயணபட்டால் மனது லேசாகிவிடும். உள்ளம் பரவசமடைந்து அது ஒரு வசந்தகாலம் என்று சொல்ல தோன்றும். இப்போது மட்டுமல்ல நம் பெரியவர்களும் இதையேதான் சொல்ல கேட்டிருப்போம். அவர்கள்  வாழ்ந்த  காலத்தை நினைத்து  பெருமூச்சு விட்டதை கவனித்திருப்போம் . அப்படியானால் காலச்சூழலில் நம் சந்தோசங்களை தொலைத்துக்கொண்டுதான் ஓடிக்கொண்டே இருக்கிறோமா?

அப்படி காலபோக்கில் மறைந்து போன ஒன்றுதான் கடிதம்.
நீங்கள் கடைசியாக எப்போது கடிதம் எழுதினீர்கள்  நினைவிருக்கிறதா? இன்றெல்லாம் கடிதம் எழுதுவது முற்றிலும் குறைந்து அலுவல் நிமித்தமாக மட்டும் என்றளவில் ஆகிவிட்டது. என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்து தொலைபேசி, கைபேசி போன்ற தொடர்பு சாதனங்கள் கடிதத்திற்கான தேவையை குறைத்திருந்தாலும், ஒரு பழைய கடிதத்தை படிக்க கிடைக்கும் சந்தோசத்தை அது தர முடியுமா? ஒரு பேரன் தன் தாத்தாவுக்கு தப்பு தப்பாக எழுதிய கடிதத்தை கற்பனை செய்து பாருங்கள்!.



பொங்கல் பண்டிகையின் போது பகிர்ந்து கொண்ட வாழ்த்து அட்டைகள் நினைவிருக்கிறதா உங்களுக்கு? எவ்வளவு சந்தோசமான தருணங்கள் அவை!. இப்போது அதை காண முடிகிறதா? கைபேசியில் அனுப்பும் குறுஞ்செய்தியோடு முடிந்துவிடுகிறது பொங்கல் நாட்கள்.



நான் சிருவனாக இருந்தபோது என் இரண்டு அண்ணன்களும் பணி
நிமித்தமாக வெளி மாநிலங்களில் இருந்தார்கள். அவர்கள் எழுதிய
கடிதங்கள் அனைத்தும் ஒரு கொக்கியில் மாட்டப்பட்டிருக்கும்.
வருடம் ஒரு முறை தான் அவர்கள் ஊர் வர இயலும்.
என் பெரியண்ணா ஊர் வரும் முன்னர் எழுதும் கடிதங்களில்
என் அம்மாவுக்கு ஒரு சிறு குறிப்பு எழுதுவார். அதில் அவருக்கு பிடித்த
உணவு வகைகளை பட்டியலிட்டு ஊர் வரும்போது செய்து தருமாறு கேட்டிருப்பார். அந்த கடிதங்கள் தந்த சந்தோசங்கள் காலத்திற்கும்
மிச்சமிருக்கும்.  

பக்கத்து வீட்டு பெரியப்பா , எதிர் வீட்டு பாட்டி , கோடி வீட்டு மாமா இவர்கள் எல்லோரையும் விசாரித்து எழுதி இருப்பார். உண்மையில் அந்த கடிதங்களுக்கு உயிர் இருந்ததை என்னால்
உணர முடிந்தது. மாடு கன்றுகுட்டி ஈன்ற செய்திமுதல்
மல்லிகா அக்கா சீமந்தசெய்தி வரை கடிதங்கள் தாங்கி  சென்ற விசயங்கள் ஏராளம்.

எப்போது கடிதம் எழுதினாலும் நான் எழுதுவதற்கென்று ஒரு அரை பக்கம் மீதம் வைத்திருப்பார் என் அப்பா. கடிதத்தை மடிப்பதற்கு என்று
இருக்கும் பகுதியிலெல்லாம் கூட எழுதுவதற்கு விசயம் இருக்கும்.   

ஒரு சிலருக்கு கடிதங்கள் எழுதிகொடுத்த அனுபவமும் , படித்துகாட்டிய அனுபவமும் எனக்குண்டு. அப்படி நான் எழுதி கொடுத்த கடிதங்கள் யார் வீட்டு பரணிலாவது பத்திரம் ஆகியிருக்குமா? . அது யாருக்காவது செல்லரித்துபோன நினைவுகளை மீட்டு தந்திருக்குமா? அந்த கடிதங்கள் இன்று என்ன நிலைமையில் இருக்கும்? கற்பனைக்கு எட்டாத கேள்விகள் தான்.

என் நெருங்கிய நண்பர் ஒருவர் எனக்கு ஒரு முறை ஒரு நீண்ட கடிதம்
எழுதியிருந்தார்.  ஆனால் அவர் அதை அனுப்பியிருக்கவில்லை. ஒருமுறை எதேச்சையாக சந்திக்க நேர்ந்தபோது , உனக்கு ஒரு கடிதம்
எழுதிகொண்டிருந்தேன் என்றார். ஆர்வமிகுதியில் தாருங்கள் என்று
வாங்கி பார்த்தேன். ஐந்து பக்கங்கள் எழுதி முடித்துவிட்டு இன்னும்
எழுதுவதற்காக வைத்திருந்தார். அருமையான ஒரு பயணம் போன்ற
அனுபவத்தை தரும் கடிதம் அது.கையோடு வாங்கிவந்து இன்னும்
பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

எவ்வளவு உணர்ச்சிகளையும், மனதின் வெளிப்பாடுகளையும் கொண்டு
சேர்த்திருக்கிறது இந்த கடிதங்கள். கடிதங்கள் போல நம்
எண்ணங்களை அப்படியே  கொண்டு சேர்க்க வேறெதுவும் இருப்பதாய்
எனக்கு தோன்றவில்லை.

கடிதங்களுக்கு   இப்போது கல்லறை கட்டப்பட்டுவிட்டது. கண்ணீரோடு போய்வா என்று சொல்வதை தவிர வேறொன்றும் எனக்கு தெரியவில்லை. நீ இன்னொரு பிறவி எடுத்துவருவாய்
என்று என் மனம் மட்டும் ஏனோ இன்னும் நம்பிக் கொண்டிருகிறது.
வருவாயா???    

                                                                              வருவாய் என்ற நம்பிக்கையோடு
                                                                               பாலகுமாரன்
                                                                               22/12/2012





 

எது பகுத்தறிவு?


எது பகுத்தறிவு? நீண்ட நாட்களாய் என் மனதில் இருக்கும் கேள்வி.  அதற்கு விடை தேட முயன்றதின் விளைவே இந்த பதிவு.

சிறுவனாக சுற்றித்திரிந்த காலத்தில் பகுத்தறிவு பேசுபவர்களை ஆச்சர்யமாக பார்த்திருக்கிறேன். உலகமே ஒன்றை நம்பியிருக்க எப்படி இவர்கள் மட்டும் வேறுபட்டு
நிற்கிறார்கள் என்று.

நம்மவர்களின் நம்பிக்கைகளை நான் இரு வகையாக பார்க்கிறேன்.
ஒன்று உடலை , உயிரை , மனதை வருத்தும் மூட நம்பிக்கைகள்.
மற்றவை எல்லாம் சாதாரண நம்பிக்கைகள்.
என் பார்வையில் ஒரு சடங்கோ ,சம்பிரதாயமோ யார் மனதையும் புண் படுத்தாத வரையில் அது மூட நம்பிக்கை ஆகாது.

உடன்கட்டை ஏறுதல் முற்றிலுமாக ஒழிந்தது என்றால் அது உடலை உயிரை வருத்தியதால் தான். மனதை வருத்தும் மூடநம்பிக்கைகளை பற்றி இன்னும் பலருக்கு கவலை இல்லை என்பதே என் கருத்து.

என்  தந்தையுடன் ஒரு உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தேன். மாப்பிள்ளை கிளம்பும் போது விநாயகர் கோவிலில் பூஜை செய்து வழியனுப்புவது
வழக்கம். என் அப்பாவை யாரோ ஒருவர் பூஜை செய்ய அழைக்க அவரும் முன்வந்து பூஜை செய்ய மாப்பிள்ளையின் அம்மா இடை மறித்து வேறொருவரை அழைத்தார். காரணம் என் அம்மா இரண்டு வருடம் முன்பு தான் காலமாகி இருந்தார்.
அன்று  வரை விதவைகளுக்கு மட்டும் தான் இந்த கொடுமைகள்
என்று நினைத்திருந்தேன். என் அப்பா வேண்டுமானால் எதார்த்த உலகத்தில் அது சரியே என்று நினைத்திருக்கலாம். ஆனால் எவ்வளவு முயன்றும் என் மனதை
தேற்றிக்கொள்ள முடியவில்லை.

ஒருமுறை ஒரு தம்பதியரின் அறுபதாம் கல்யாணத்திற்கு சென்றிருந்தேன். குழந்தைகள் முதல் பெரியோர் வரை எல்லோரும் தம்பதிகள் மீது
நீரூற்றி ஆசீர்வதிக்க அந்த தம்பதியரின் பெண் சம்பந்தி வரிசையில் வர
அங்கிருந்த புரோகிதர் "சம்பந்தியம்மா அப்புறமா வாங்கோ!" என்றார். காரணம் அவர் விதவை.

வாழ்த்துவதற்கும் ஆசிர்வதிக்கவும் நல்ல மனம் இருந்தால் போதும் தானே?. அதை விட பெரிய தகுதி வேறென்ன இருக்க முடியும்.

எதார்த்த உலகம் இப்படி இருக்க பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்
கொள்பவர்கள்  கடவுள் இல்லை. சாமி கும்பிட மாட்டோம் என்று மட்டுமே சொல்லித்திரிகிறார்கள்.
சீர்திருத்த கல்யாணம் என்று சொல்லிக்கொண்டு தாலி இல்லாமல் , புரோகிதர் இல்லாமல்  திருமணம் என்கிறார்கள்.

தங்கள் வசிதிக்கேற்றவாறு பகுத்தறிவை வளைத்துக்கொள்கிறார்கள் .
என் குடும்ப நண்பர் என்று சொல்லிக்கொண்டு தன் சமூகத்திற்கு சமமான
பிற சமூகத்தில் இருந்து கூட பெண்ணோ மாப்பிள்ளையோ எடுப்பது  இல்லை இவர்கள்.

இவர்கள் சாடும் சாதாரண மக்களின் நம்பிக்கைகள் எல்லாம் யார் மனதையும் காயப்படுத்துவதில்லை. அது இருந்தா இருந்துட்டு போகட்டுமே!

தாலி கட்டிக்கொள்ளுதல் கல்யாணமானதற்கான அடையாளமாககூட இருக்கலாமே?
மேலை நாட்டினர் மோதிரம் மாற்றிக் கொள்வது போன்றதொரு சடங்குதானே அது. எந்த விதத்தில் அதிலிருந்து வித்தியாசப்பட்டு போகிறது. வேண்டுமானால் ஆண்களுக்கும் ஒரு அடையாளத்தை உண்டு பண்ணியிருக்கலாம் பகுத்தறிவாளர்கள். நம்மவர்கள் வழக்கத்தில் இருப்பதெல்லாம் மூடத்தனம் என்றும் மேலை நாட்டினர் பின்பற்றுவதாலேயே அது அறிவார்த்தமானது என்று நம் இளைய தலைமுறைக்கு கற்பித்து போய் விடுவோமோ என்ற பயம் இருக்கிறது எனக்கு.

திருமணத்தில் வாழை மரம் கட்டுவது அழகுக்காக கூட இருக்கலாமே? இது போன்ற எத்தனை சின்ன சின்ன விசயங்களை நம் மக்கள் பின்பற்றிய காரணத்துக்காக மட்டுமே மூடத்தனமாக தூக்கி வீச வேண்டும் என்கிறோம். இதில் எங்கே நம் பகுத்தறிவு இருக்கிறது.

எந்த சடங்கு சம்பிரதாயங்களும் இல்லாவிட்டால் ஒரு வெறுமை தானே மிஞ்சும் விழாக்களில். 10 நிமிட வேலையாக மட்டுமே இருக்கும் ஒரு திருமணம்.

ஒவ்வொரு சடங்கு  சம்பிரதாயங்களிலும் ஒரு அர்த்தம் பொதிந்திருக்கும்போது அதை நாம் தெரிந்து கொள்ள முயற்சிக்காமல் மூடநம்பிக்கை என்று ஒதுக்கிவிட்டோமே என்று தான் வருத்தம்.  சடங்குகளை பற்றி தெரிந்து கொள்வதில் அவ்வளவு சிரமம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. நம் பகுத்தறிவாளர்கள் தங்களை வெகுஜன மக்களிடமிருந்து வித்தியாசப்படுத்தி கொள்ளவே முயன்றிருக்கிறார்கள். அதன் பிரதிபலிப்பாகத்தான் சீர்திருத்த திருமணங்களை பார்க்கிறேன்.

பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு நம் சடங்கு சம்பிரதாயங்களை கண் மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம் என்று தான் சொல்கிறேன் . அப்படி நாம் செய்ய முற்பட்டால் அது பகுத்தறிவாகாது.

எனவே, முதலில் நாம் மனதை காயப்படுத்தும் மூட  நம்பிக்கைகளை கண்டறிந்து களைந்தெறிவோம்.
பெரியார் கண்ட பகுத்தறிவை அடைய இன்னும் நாம் நிறைய தூரம் பயணிக்கவேண்டும்.  அதுவரை நம்மை பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்கொள்ளாமல் வாருங்கள் பயணிப்போம் அவர் பாதையில்......

                                                                                                                  சக பயணியாக
                                                                                                                  பாலகுமாரன்
                                                                                                                  21/10/2012





    



குருகுலம்

நண்பர்களே ,

இதோ என் முதல் பதிவு என் குருவிற்காக!!

ஒரு ஞாயிற்றுக் கிழமை  அதிகாலை 5.30 மணி இருக்கும். எனது தூக்கம் கலைந்திருந்தது. புரண்டு படுத்து  திரும்ப தூங்க முயன்று தோற்று போனேன். மனது எங்கோ பின்னோக்கி பறந்து ...........ஒரு நிமிடம்!!,  எப்படி நம் மனது ஒரு இசைதட்டில் பொதிந்திருக்கும ஒரு பாடலை தேர்வு செய்து இசைப்பது போல எதையாவது ஒன்றை நம் நினைவுகளிலிருந்து தேர்ந்த்தெடுத்து  அசை போடுகிறது நம் அனுமதி இல்லாமல்!! அப்படித்தான் என் எண்ணங்கள் எனது ஆசிரியர் சுகுமார்  (எ) சுந்தர்ராஜனை
பற்றி அசை போட்டு கொண்டு இருந்தது. இதோ எழுந்து உட்கார்ந்து எழுத ஆரம்பித்துவிட்டேன்.

அவரை எப்படி அறிமுகப்படுத்துவது. அவர் எங்களது பள்ளி ஆசிரியர் அல்ல.
நான் ஓன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படித்தபோது எங்களுக்கு   டியூஷன் எடுத்தார்.
சுகுமார் சார்  ஒரு வித்தியாசமான மனிதர் . அவர் பிறப்பால் ஒரு பிராமணர். எப்போதும் ஜாலியாக இருப்பார். கண்களுக்கு Ray-Ban கண்ணாடி அணிந்து  ஸ்டைலாக வலம்வருவார். கமலஹாசனின் பரம விசிறி.
தேவர்மகன் திரைப்படம் வந்த போது அவர் கமல் போல மீசைவைத்திருந்தார்.
பின் அதுவே அவரின் அடையாளமானது. அவரின் சுறுசுறுப்பிற்கு
இணையாக இன்றுவரை என்னால் யாரையும ஒப்பிட முடியவில்லை.
பள்ளிக்கு கூட போக பிடிக்காமல் இருந்தது உண்டு. ஆனால் ஓருபோதும் டியூஷனுக்கு  மட்டம் போட  நினைத்ததில்லை.

1990 க்கும் 1993 க்கும் இடைப்பட்ட காலம் அது. கிட்டத்தட்ட குருகுலம் போன்று தான்  இருந்தது நங்கள் அவரிடம் படித்தது. நாங்கள் பள்ளியில் இருந்த நேரத்தை விட டியூஷன் சென்டரில் இருந்த
நேரம் தான் அதிகம். அவரிடம் தான் கமலஹாசனை ரசிக்க கற்றுக்கொண்டேன். கிரிக்கெட் விளையாட கற்றுக்கொண்டேன்
பைக் ஓட்ட கற்றுக்கொண்டேன்.

விளையாட்டு போலவேதான் இருந்தது எங்களது படிப்பு. நிறைய பெற்றோர்களுக்கு நங்கள் எங்கே உருப்பட போகிறோம் என்ற கவலை கூட இருந்தது. ஏனென்றால் சுகுமார் சீட்டு ஆடுவார் , சிகரெட் புகைப்பார். கிரிக்கெட் மீது  பைத்தியம்.  நடந்து போகும் போதுகூட காதில் ரேடியோ வைத்து கிரிக்கெட்  கமெண்ட்ரி கேட்டு கொண்டு போவார். ஆனால் ஒருபோதும் எங்களின் ஒழுக்ககேட்டை சகித்து கொண்டதில்லை.

அவர் ஒரு  பள்ளியில்(அய்யம்பட்டி) சத்துணவு ஆசிரியராகவும் பணியாற்றினார். சனி ஞாயிறு -களில் அந்த பள்ளியில் தான் எங்களது டியூஷன். மதியம் வரை பாடம் இருக்கும். பின்னர் மாலை முழுவதும் விளையாட்டுதான்   பாரதி சொல்லி வைத்தது போல. கிரிக்கெட், குண்டு விளையாடுதல் , கிணற்றில் நீச்சல் அடித்தல் . பின் எப்படி கசக்கும் இந்த டியூஷன். இதோ என் நண்பர்களை நினைவுகூற ஒரு சந்தர்ப்பம். அய்யம்பட்டி செல்வம்,  ரேணு கோபால், செம்பாறை விசு , MP பழனிச்சாமி, நாகராஜ், வடகம்பாடி ரமேஷ் . சீனியர் செட்டில் விசு , முத்துசாமி , பொன்னாமலை  இன்னும் பலர்.

முழு ஆண்டு தேர்வு நெருங்கும்போது அவர் வீட்டில்(நொச்சிப்பட்டி)  நைட் ஸ்டடியும் இருக்கும். சைக்கிளில் சென்றுவிட்டு
காலையில் தான் திரும்புவோம்.
இரவு படித்து முடித்து விட்டு ஈசனத்தம் (அருகில் இருக்கும் சின்ன டவுன் ) டெண்டில் இரவுக்காட்சி  சினிமா கூட  பார்த்ததுண்டு. அங்கிருந்து 6 கிலோமீட்டர் சைக்கிளில் சென்று வருவோம். இப்போது சொல்லுங்கள்  எங்களது பெற்றோர்களிடம் இருந்த பயம் நியாயம் தானே.

அதற்காக நாங்கள் படிக்காமல் இருந்து விடவில்லை.
நாங்கள் படித்தது ஒரு அரசினர் பள்ளியில்(R வெள்ளோடு). எனக்கு தெரிந்து ஒரு வருடம் 10th ரிசல்ட்-ல்  வாஷ் அவுட் ஆனது கூட உண்டு. அந்த காலகட்டத்தில் அந்த நிலைமையிலிருந்து பள்ளியை
மீட்டெடுத்தவர் சுகுமார் சார் தான்.
மாற்று கருத்து இருந்தால் மன்னிக்கவும்.

டியூஷன் என்றால் ஏதோ கணிதம் ஆங்கிலம் மாத்திரம் அல்ல. எல்லா பாடங்களுக்கும் அவர்தான். கடைசிவரை அவர் என்ன படித்திருந்தார் என்று எங்களுக்கு(எனக்கு) தெரியாது. அவர் ஒரு சகலகலா மேதாவி.
அன்று நடத்தியவரை வினாடிவினா இருக்கும். கிட்டத்தட்ட அது ஒரு பெரிய போர்க்களம் போல தான் இருக்கும். இரண்டு குழுவாக பிரித்து கரும்பலகையில் மதிப்பெண் இடுவார். வெற்றி பெறுபவர்களுக்கு பேனா , பென்சில் என்று எதாவது பரிசளிப்பார்.  ஒன்று சொல்ல ஆசை படுகிறேன்.
அவருக்கு கற்றுதருதலில் கண்டிப்பாக ஒரு காதல் இருந்தது.

மாலையில்  R .வெள்ளோடு பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் ஆடுவோம். அவரும் எங்களுடன் சேர்ந்து ஆடுவார். அவருடன் சேர்ந்து நிறைய கிரிக்கெட் பார்த்ததும் உண்டு.
இதற்காகவே அவர் வீட்டில் டிஷ் ஆண்டெனா இருந்தது. ஊருக்கு ஒரு தொலைகாட்சி இருந்த காலம் அது.

பத்தாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வுக்கு நாங்கள் குஜிலியம்பாறை 15 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் இன்னொரு பள்ளிக்கு சென்று தேர்வு எழுதவேண்டும்.
எல்லா தேர்விற்கும் எங்களுடன் வருவார். கடைசி நிமிட படிப்புக்கு உறுதுணையாக இருப்பார். 

தேர்வுக்கு இடையே அவருக்கு ஆன சிறிய விபத்தால் கணித தேர்விலிருந்து
அவரால் எங்களுடன்  வர இயலவில்லை. கணித தேர்வு முடித்ததும் அவரை  வீட்டில் சென்று பார்த்தோம். எல்லா தேர்வுகளையும் எழுதி முடித்துவிட்டு முடிவுகளுக்காக காத்திருந்தோம்.

அந்த நாளும் வந்தது. அப்போதெல்லாம் மாலைமலர் அல்லது மாலைமுரசு
நாளிதழில் தான்தேர்வு முடிவுகள் வெளியாகும்.
சுகுமார் சாரின் உழைப்பு வீண்போகவில்லை. முடிவுகள் வந்தபோது 90 விழுக்காடுக்கு மேல் தேர்வாகி இருந்தார்கள்.இருவர் மட்டும் தேர்வாகவில்லை. அவர்களிருவரும் இவரிடம் படிக்கவில்லை.

மறுநாள் தலைமை ஆசிரியர் மதிப்பெண் அறிவித்தார். முதல் மதிப்பெண் 403  என்றும் கணிதத்தில் ஒருவர்  100 க்கு 100 மதிப்பெண் என்றும் சொன்னார்.
அந்த இரண்டையும் பெற்றது நான் தான் என்பதை அறிந்தபோது அளவற்ற மகிழ்ச்சி.

கணிதத்தில் நிறைய பேர் ஓரிரு மதிபெண்ணில் சென்டம்(முழுமை)  தவற
விட்டிருந்தினர். சுகுமார் சார் சந்தோஷத்தில் திளைத்தார். இதிலென்ன சாதனை இருக்கிறது? உங்கள் கேள்வி நியாயமானதுதான். 30 ஆண்டு கால பள்ளி வரலாற்றில் இது போன்ற ரிசல்ட் அதுவே முதல் முறை.
இவர்கள் எங்கே உருப்பட போகிறார்கள் என்றவர்களின் முன்னால் காலரை தூக்கிவிட்டு கொண்டு நடந்தோம்.

எங்கள் முன் எந்த லட்சியமும் முன்னிருத்தபடவில்லை. உண்மையை சொல்ல போனால் தேர்வு எழுதி முடிக்கும் வரை 100 எடுப்பேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை நான் . சத்தியமாய் சொல்கிறேன் சுகுமார் சார், இது நீங்கள் எடுத்த மதிப்பெண்.

அடுத்தடுத்த ஆண்டுகளிலும் அதை விட நல்ல ரிசல்ட் தந்து ஆச்சரியப்படுத்தினார். வேறு பள்ளிக்கு நான் சென்று விட்டாலும் நேரம் கிடைக்கும்போது சென்று
அவருடன் கிரிக்கெட்  ஆடுவேன்.

இவ்வளவு வெற்றியை தந்த அவருக்கு எதாவது செய்ய வேண்டும் என்று
நினைத்த போது  கூட என் நினைவிற்கு வந்தது சிகரெட் தான். ஒரு நாள் R.வெள்ளோடு பள்ளி மைதானத்தில் கிரிக்கெட்
ஆடிகொண்டிருந்தபோது  ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கிவந்து கொடுத்தேன். முகமலர்ச்சியுடன்
ஏற்று கொண்டார்.

அவரின் ஆயுளை குறைத்ததில் எனக்கும் ஒரு துளி அளவாவது
பங்கு உண்டு என்பதை   உணர்ந்தபோது மனது வலித்தது. ஆம் ஒரு தேனீ போன்ற சுறுசுறுப்புடன் சுற்றிக்கொண்டு இருந்த சுகுமார் சார் இனி இல்லை
என்று என் நண்பர்கள் சொல்ல கேட்ட போது உடைந்து விட்டேன்.
2010 -ஆம் வருடம்  ஒரு பிப்ரவரி நாளில் அவரை காலன் அழைத்துகொண்டான். இடைவிடாத புகைபழக்கம் அவரை இவ்வளவு சீக்கிரம் பிரித்துவிடும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.

கொஞ்ச நாள் கழித்து  நானும் செல்வமும் சென்று சுகுமார் சாரின் தாயார் ,
மற்றும் துணைவியாரை பார்த்துவர சென்றோம். அழுதுகொண்டே பேசிய அந்த தாய்க்கு சமாதனம் சொல்ல எங்களிடம்
வார்த்தைகள்  இல்லை. அங்கு மௌனம் மட்டும் தான் எங்கள் மொழியானது.

இன்னும் கூட நீங்கள் இந்த உலகத்தில் இல்லை என்பதை மனது ஒரு தயக்கத்துடனே தான் ஏற்று கொள்கிறது.

எனக்கு கடவுள் நம்பிக்கை குறைவு என்றாலும் உங்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் குருவே!!!

கமல்ஹாசனின் ஒரு நல்ல படம் பார்க்கும்போதும் , இந்தியா கிரிக்கெட்டில் உலக கோப்பையை வென்ற போதும் உங்கள் முகம் மின்னல் போல் ஒரு நொடி வந்து போகாமலில்லை..
                                                                                                                  
                                                                                      என்றும் உங்கள்  நினைவுகளுடன்
                                                                                      பாலகுமாரன்
                                                                                      30/09/2012








.



  

பட்டாம்பூச்சி!!!



நண்பர்களே , இதோ நானும்

எங்கோ  தொலைந்துவிட்ட நினைவுகளை

தூசி தட்டி புரட்டி பார்க்க எனக்கு கிடைத்த சந்தர்பம் .....

நாம்  எழுதிய நாட்குறிப்பை நாள்கடந்து படிக்கின்ற சந்தோஷம் ....

பல வருடம்  கழித்து பார்த்த

கல்லூரி நண்பனின் கதைத்தலில் கிடைக்கின்ற ஆனந்தம்.....

பார்த்தவை, கேட்டவை, ரசித்தவை பகிர்தலுக்கு கிடைத்த பட்டாம்பூச்சி


இனிமேல் எப்போதாவது உங்கள் வீடுவரை வந்துவிட்டு போகும்!!!


                                                                                                               - பாலகுமாரன்
                                                                                                                  22/09/2012