தேர்தல் அரசியலும் ...எதார்த்தங்களும் ..


2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் என்று நினைக்கிறேன். வானம்பாடி பசுமை இயக்கத்தின் முதல் விவசாய கருத்தரங்கை R.வெள்ளோட்டில்  நடத்தினோம். திண்டுக்கல் வேளாண் பொறியியல் துறை அலுவலர்  திரு பிரிட்டோராஜ் அய்யா அவர்களை கருத்தரங்க பயிற்சியாளராக அழைத்திருந்தோம். அவர்தான் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் 
டாக்டர் V .P .B .பரமசிவம் அவர்களை அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கலாம் என்று எங்களிடம் சொன்னார். எங்களின் அழைப்பை ஏற்றுக்கொண்டு அந்நிகழ்ச்சிக்கு திரு.பரமசிவம் வந்திருந்தார். அப்போதுதான் அவர் எனக்கு முதன் முதலாக அறிமுகம்.







அவருடைய தந்தையார்  திரு V P .பாலசுப்ரமணியம்  துணைசபாநாயகராக இருந்தபோது நான் சிறுவன். அவர் எங்கள் ஊரில் இந்திரா குடியிருப்பை திறந்துவைப்பதற்காக வந்தது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. ஒரு பத்து  பதினைந்து கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நின்றபின்  ஒரு காரில் இருந்து இறங்கி அவர் அந்த  குடியிருப்பை திறந்து வைத்து பேசினார்.

அவருடைய  புதல்வர் தற்போது சட்டமன்ற உறுப்பினர். கொஞ்சம் எங்களுக்கு   பதட்டமாக தான் இருந்தது.  ஆனால் திரு.பரமசிவம் அவர்கள் எங்கள் நிகழ்ச்சிக்கு மிக எளிமையாக வந்து கலந்து கொண்டார். அவருடைய கட்சிக்காரர்களுக்கு கூட அவர் வருவது தெரிந்திருக்கவில்லை. சுற்றுசூழல் மற்றும்  வேளாண்மை சார்ந்த எங்களுடைய முன்னெடுப்புகளை  வெகுவாக பாராட்டினார். 




அப்போதிருந்து இன்றுவரை வானம்பாடி பசுமை இயக்கம் முன்னெடுத்த அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருந்திருக்கிறார்.  அதிகாரிகளின் துணையோடு நம் பகுதிகளில் விவசாய நிலங்களில் பண்ணை குட்டைகள் அமைத்தபோது ஒரு ஐந்து பண்ணைக்குட்டைகள் தான் அமைக்க முடியும் என்று அதிகாரிகள் சொன்னார்கள். ஒரு பதினைந்து குட்டைகளாவது இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து இவரை தொடர்பு கொண்டு உதவி கேட்டோம்.

எங்கள் வானம்பாடி  உறுப்பினர்களை அவரது இல்லத்திற்கு வரவழைத்து வேளாண் பொறியியல்துறைக்கு ஒரு பரிந்துரை கடிதத்தை எழுதி கையில் கொடுத்தார். அவர்கள் அங்கிருந்த போதே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து எங்கள் பகுதியின் வறட்சி நிலையை விளக்கி பண்ணைக்குட்டைகள் அதிகப்படுத்தி கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரின் உதவியுடன் கிட்டத்தட்ட 25 பண்ணைக்குட்டைகள்  R வெள்ளோடு கிராமங்களை சுற்றிலும் அமைத்தோம்.  

2019 ஜனவரியில்  வானம்பாடிக்கு R .வெள்ளோட்டில் ஒரு அலுவலகமும் இயற்கை அங்காடியும் திறக்க முடிவு செய்து அவரை திறப்பு விழாவிற்கு அழைத்திருந்தோம். அன்றும் கலந்துகொண்டு வானம்பாடி போன்ற அமைப்புகளின் அவசியத்தை கலந்துகொண்டவர்கள் மத்தியில் விளக்கினார்.




ஊருக்கு அருகில் அமையவிருந்த ஒரு கிரானைட் குவாரியினை கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து  கிராம சபை தீர்மானம் மூலம் நிறுத்த முயற்சிசெய்த போது வட்டார வளர்ச்சி அலுவலர் அதை தீர்மானமாக எழுத முன்வரவில்லை. திரு.பரமசிவம் அவர்களை அனுகியதும் சம்பந்தபட்ட அலுவலரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தீர்மானத்தை பதிவு செய்ய வலியுறுத்தினார். அதன்பிறகு பக்கத்து கிராமங்களிலும் அதையே தீர்மானமாக முன்மொழிந்து அந்த பகுதியில் குவாரி வருவது தடுக்கப்பட்டது.

ஒருமுறை வேடந்தூருக்கு அவரை சந்திக்க அழைத்திருந்தார்.  நாங்கள் சென்றபோது  அவரது தந்தையின் நினைவாக வேடசந்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்திருந்தார்.  நல்ல  கூட்டம் இருந்தது. தூரத்தில் இருந்து சைகையில் கொஞ்சநேரம் எங்களை அமரச்சொன்னார். அவரும் மருத்துவர் என்பதால் இது போன்ற மருத்துவ முகாம்களை அவர் MLA ஆகும் முன்பிருந்தே நடத்தி வந்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து நாங்கள் அவரை சந்தித்தோம். 

எங்களுடன் அவர் பேசிக்கொண்டிருக்கும் போது  ஒரு  நடுத்தர வயது பெரியவர்  அவரின் தோளை  தட்டி  "துரை இந்த ரிப்போர்ட்டை கொஞ்சம் பார்த்து  சொல்லு" என்று ஒருமையில் சொன்னார். சிறுவயதில் இருந்து அவர் பழகியிருக்க  கூடும் என புரிந்தது. இவர் சிறிதும் தாமதிக்காமல்  அவர் கொடுத்த ரிப்போர்ட்டை பார்த்துவிட்டு மருத்துவர் ஒருவர் அமர்ந்திருக்கும்  அறையை நோக்கி  கையை நீட்டி இப்படி சொன்னார்  "அய்யா அந்த ரூமுக்கு போங்க. அந்த டாக்டர் கலைஞர் கருணாநிதிக்கு வைத்தியம் பார்க்கும் காவேரி ஆஸ்பிட்டலிலிருந்து வந்திருக்கிறார். நன்றாக பார்ப்பார்." என்று நிதானமாக  சொன்னார். அவர் எல்லோரிடத்திலும் இனிமையாக பழக கூடியவர் என்பது சொல்லாமல் புரிந்தது.



கட்சி அரசியல்கள் கடந்து நல்ல பண்பாளர் ஒருவரை நாம் ஏன் நமக்கான பிரதிநிதியாக தேர்ந்தெடுக்க வேண்டும்  என்று விளக்குவதற்காகவே மேலே சொல்லியிருக்கும் அத்தனை உதாரணங்களும்.

நான் பார்த்த வரையில் உள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் முதல் நாடாளும் அமைச்சர்கள் வரை சாதாரண மக்கள் எளிதில் அணுக முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். அந்த வகையில் திரு.பரமசிவம் அவர்கள் எளிதில் அணுக கூடியவராகவே எப்போதும் இருந்திருக்கிறார். இப்போதும் இருக்கிறார். 

எனது தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் கொள்கைகள் பற்றி என்னுடன் பழகியவர்களுக்கு தெரிந்திருக்கும். உண்மையில் என் வாழ்நாளில் இதுவரை ஒருமுறைகூட அவர் சார்ந்திருக்கும் கட்சிக்கு  வாக்களித்ததில்லை. 

முதல் முறையாக கட்சி அரசியல் தாண்டி என்னை யோசிக்க வைத்தவர் திரு.பரமசிவம் அவர்கள் தான் . 

அவர் சார்ந்திருக்கும் கட்சி ஆட்சியில் அமர்ந்தாலும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தாலும் திரு.பரமசிவம் போன்றவர்கள் நம் பிரதிநிதிகளாக இருப்பது ஊருக்கும் நாட்டிற்கும் நல்லது.

பாலகுமார் 
R.வெள்ளோடு   


என்ன செய்து கொண்டிருக்கிறோம் வானம்பாடியில்?



வானம்பாடி பசுமை இயக்கம்

மாற்றம் என்பது சொல் அல்ல செயல்  
-கோ.நம்மாழ்வார்



என்ன  செய்து கொண்டிருக்கிறோம்  வானம்பாடியில்?

ஏறக்குறைய ஆறு மாதங்கள் ஆகியிருக்கும் வானம்பாடி அமைப்பை துவக்கி. திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களின் எல்லைகளில் அமைந்திருக்கும் R .வெள்ளோடு மற்றும் ஈசநத்தம் கிராமங்களில் வறட்சியின் பிடியால் அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தை மேம்படுத்தவும் , நிலத்தடி நீராதாரங்களை காக்கவும் வானம்பாடி பசுமை இயக்கம் பணியாற்றிக்கொண்டிருக்கிறது.

வானம்பாடி பசுமை இயக்கத்தின் நோக்கங்கள் 

மழை நீர் சேகரிப்பு, நிலத்தடி நீராதாரங்களை மேம்படுத்துதல் அவற்றை பாதுகாத்தல், நீர்மேலாண்மை சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

பசுமையாக்கம் - மரம் நடுதல் , அவற்றை பராமரித்தல் மற்றும் மரம் நடுதலை ஊக்குவித்தல் 

இயற்கை விவசாயத்தையும், நஞ்சில்லாத விவசாயத்தையும் முன்னெடுத்தல் மற்றும் அதை பரவலாக்குதல்.

இப்படி இன்னும் நிறைய சொல்லலாம். ஆனால் இவற்றில் எல்லாவற்றுக்கும் முதன்மையானது நீராதாரங்கள்.  அதற்கான முயற்சியில் முதல் அடி எடுத்து வைத்திருக்கிறோம்.   

இதுவரை  ...

நீரின்றி அமையாது உலகு . விவசாயம் உட்பட பல்வேறு பயன்பாடுகளுக்காக நாம் நிலத்தடி  நீராதரங்களை பயன்படுத்தும் அளவிற்கும் , மழை பெய்து நீராதாரங்கள் தங்களை புதுப்பித்து கொள்வதற்கும் மிகப்பெரிய இடைவெளி உண்டாகிவிட்டது. 
அதனால் நிலத்தடி நீர்மட்டம் 100 அடி 200 அடி என்ற அளவிலிருந்து 500 அடி 1000 அடிக்கு மேல் கீழே சென்றுவிட்டது. 
இதற்கு பல காரணங்களை சொல்லலாம். பிரதானமாக மனிதர்களின் அறியாமையும் ,  பேராசையும்  அதனால்  ஏற்பட்ட சுற்றுசூழல் சீர்கேட்டையும் காரணமாக சொல்லலாம்.

காரணங்களை தேடிக்கொண்டும் , குற்றம்  சுமத்திகொண்டு  இல்லாமல் இதை எப்படி சரி செய்வது , அதிலிருந்து  தப்பி பிழைப்பது என்று யோசித்தபோது திண்டுக்கல் மாவட்ட வேளாண் பொறியாளர் திரு.X.பிரிட்டோராஜ் அவர்கள் தமிழகமெங்கும் பயணம் செய்து நீர் மேலாண்மை  தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு பயிற்சியாக அளித்து வருவது தெரியவந்தது.
அவரை அணுகி R.வெள்ளோடு பகுதியில் "நீர்மேலாண்மை  மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம்"  என்ற தலைப்பில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஈசநத்தம் பகுதியிலும் அவரை வரவழைத்து அதே போன்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 500 விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பண்ணைக்குட்டைகள் அமைத்து மழைநீரை சேகரிப்பதன் அவசியம் மற்றும் பல்வேறுவிதமான சொட்டுநீர் பாசன முறைகள் குறித்தும் பயிற்சியளித்து விவசாயிகளிடையே பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார்.
R .வெள்ளோடு நிகழ்வில் திரு.பிரிட்டோராஜ் அவர்களுடன் 
ஈசநத்தம் நிகழ்வில்  திரு.பிரிட்டோராஜ் & திரு கந்தசாமி  அவர்களுடன் வானம்பாடி அமைப்பினர் 

அதோடு மட்டுமில்லாமல் வேளாண்பொறியியல்  துறையின் மூலம் அரசு  மானியத்துடன்   15 பண்ணைக்குட்டைகள் அமைக்க  அனுமதி பெற்று தந்தார். 

 தற்போது ..

 R.வெள்ளோடு  மற்றும் அருகில் இருக்கும் கிராமங்களில் பண்ணைக்குட்டை அமைக்க விருப்பம் தெரிவித்தவர்களின் விபரங்கள் சேகரித்து வேளாண் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டது.   

தற்போது 10 பண்ணை குட்டைகளுக்கான பணிகள் ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கிறது .
R.வெள்ளோடு, திருக்கூர்ணம், ஆலம்பாடி மற்றும் கோட்டநத்தம் கிராமங்களுக்கு இந்த குட்டைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொன்றும் 100 அடி X 100 அடி நீள அகலத்துடன் 5 அடி ஆழம்  என்ற  அளவில் அமைக்க வேண்டும்.  4 அடி உயரம் கரை அமைக்க வேண்டும்.  ஒவ்வொரு குட்டைக்கும் 25 ஏக்கர் அளவில் நீர்ப்பிடிப்பு பகுதிகள் இருக்குமாறு பார்த்து வேளாண் அதிகாரிகள் இடத்தை தேர்வு செய்து கொடுத்திருக்கிறார்கள்.  நல்ல மழைப்பொழிவு  இருந்தால் ஒவ்வொரு குட்டையிலும் தோராயமாக 20 லட்சம் லிட்டர் மழை நீரை சேகரிக்க முடியும். 15 குட்டைகளும் அமைத்துவிட்டால் 3 கோடி லிட்டர் மழைநீரை கிராமங்களின் பல்வேறு இடங்களில் சேகரிக்க முடியும். இதன் மூலம்  நிலத்தடி நீர் மட்டம் உறுதியாய் உயரும் என்று நம்பலாம். 

வானம்பாடி அமைப்பிலிருந்து  இந்த பணியினை ஆரம்பத்திலிருந்து ஆர்வம்  குறையாமல் அதிகாரிகளுடனும் விவசாயிகளிடமும்  பேசி ஒருங்கிணைத்து சாத்தியப்படுத்தியவர் அய்யம்பட்டியை சேர்ந்த சௌந்தர். இந்த பணியினை மேற்பார்வையிட்டு வழிகாட்டிக்கொண்டிருப்பவர் வேளாண் அதிகாரி திரு. சேதுராமன் அவர்கள். அவர்கள் இருவருக்கும் வானம்பாடி பசுமை இயக்கத்தின் சார்பாக நமது  நன்றிகள்.

  
திரு .செழியன் தோட்டத்தில் 

திருமதி.பசுங்கொடி தோட்டத்தில் 

திரு.பொன்னாமாலை தோட்டத்தில் 

திருமதி.ராஜேஸ்வரி தோட்டத்தில் 

திரு.ராமானுஜம் தோட்டத்தில் 
திரு.வரதராஜ்  தோட்டத்தில் 




இனிமேல்....

மத்திய அரசின்  திட்டமான   விவசாயிகளுக்கான இயற்கை வேளாண்மை குழு  சான்றிதழ்   திடடத்தில்  இணைந்து 
R .வெள்ளோடு மற்றும் மல்லபுரம் ஆகிய பகுதிகளில் 20 உறுப்பினர்களை  கொண்ட இரண்டு இயற்கை விவசாய குழுக்கள் அமைக்கப்படவிருக்கிறது . இரு குழுவிலும் சேர்த்து மொத்தம் 100 ஏக்கர் நிலங்களில் இயற்கை விவசாயத்திற்கு நிலத்தை பண்படுத்தி காய்கறி  பயிர்கள் பயரிடவேண்டும்.  முடிவில் குழுவில் இருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும்  அரசு  ஆர்கானிக் சான்றிதழ் வழங்கும்.

அடர்வனம் அமைத்து பராமரித்தல் 

நம் பகுதிகளை பசுமை ஆக்குதல் என்பது வானம்பாடியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.  அதற்காக நம் பகுதிகளில் இரண்டு அடர்வனங்கள் (ஜப்பானிய மியாவாக்கி முறையில் அமைக்கப்படும் காடு) அமைக்கலாம் என்று திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு அடர்வனமும் 18 லிருந்து  20 சென்ட் பரப்பளவில் பலவகைப்பட்ட மரங்களை கொண்டதாக இருக்கும்.  இந்த அடர்வனங்களை சொட்டுநீர் பாசனம் அமைத்து பராமரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் .   

எங்கோ நான் படித்தது நினைவிற்கு வருகிறது. இந்த பூமி ஒரு வாடகை வீடு போன்றது . நமக்கு எப்படி நம் முன்னோர்கள் நம்மிடம்  கொடுத்து சென்றனரோ, அதேபோல நாம்  நம்  தலைமுறை பிள்ளைகளுக்கு  விட்டுச்செல்ல வேண்டிய  பொறுப்பு நம்  எல்லோருக்கும் இருக்கிறது .  இதற்கு வானம்பாடி ஒரு பாலமாக இருக்கும் என்று நம்பலாம்.

நம்பிக்கையுடன் 
பா.பாலகுமார் 
வானம்பாடி பசுமை இயக்கம்  












வானம்பாடி

வானம்பாடிக்கு இப்போது தான் சிறகுகள் முளைத்துக்கொண்டிருக்கிறது. அது என்ன வானம்பாடி?  இதை படித்து முடிக்கும்  போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

என்னுடைய ஊர் திண்டுக்கல் மாவட்டம் , R .வெள்ளோடு கிராமத்தில் இருக்கும் பொன்னம்பட்டி என்ற  சிற்றூர். மொத்தமாக 45குடும்பங்கள் இருக்கும்.  எனது ஊருக்கும் எனக்குமான தொடர்பு அறுந்து போய் 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. 1999 நான் கல்லூரி இறுதியாண்டு படித்து கொண்டிருக்கும்போது எங்கள் பூர்வீக வீடு மற்றும்  கொஞ்சமாய் இருந்த நிலங்களை விற்றுவிட்டு  ஊரை காலிசெய்துவிட்டு  வந்துவிட்டோம். எனக்கு இயல்பிலேயே என் ஊரின்மீது கொஞ்சம் பற்று அதிகம். வீடு இல்லை என்றாலும் நண்பர்கள் மற்றும் சொந்தங்களுடன் தொடர்பில் இல்லாமல் இல்லை. 

கடந்த வருடம் 2016 டிசம்பர் மாதத்தில் எல்லோரும் போல் ஊருக்கு ஒரு WhatsAap குழு இருக்க வேண்டும் என்று தோன்றவே ஒரு குழு ஆரம்பித்தோம். அவர்களுக்கு வரும் செய்திகளை அப்படியே அங்கும் இங்கும் திருப்பி அனுப்பிக்கொண்டிருந்த நண்பர்களை தமிழ் keyboard வைத்துக்கொண்டு அவர்களது சொந்த எண்ணங்களை பகிர்ந்து கொள்ள பழக்கப்படுத்தினோம். கொஞ்ச நாள் கழித்து ஊரில் மரக்கன்றுகள் நடலாம் என்று ஒருநாள் பேச்செடுத்தபோது தண்ணீருக்கே டேங்கரை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம்  மரம்  நடலாம் என்று வந்து விட்டாயே  என்று நண்பர்கள் சொன்னார்கள். அப்போது தான் ஊர் நிலவரமே புரிய ஆரம்பித்தது.

தண்ணீர் பிரச்சனையை முதலில் தீர்க்கவேண்டும் என்று நண்பர்கள் அனைவரும் பேசி முதல்வர் தனிப்பிரிவில் ஒரு புகார் கொடுத்தோம். காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் பயன்பெற்று கொண்டிருந்த எங்கள் ஊருக்கு தண்ணீர் வருவது தடைபட்டுபோனது என்றும் அதை மீண்டும்  வரும்படி ஆவண செய்ய புகாரில் கேட்டு கொண்டோம். மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அந்த புகார்மனு அனுப்பப்பட்டு வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஊருக்கு  வெளியில்  ஆழ்குழாய் கிணறு அமைத்து கொடுத்து குடிதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.

தண்ணீருக்கு இனி  ஒன்றும் பிரச்சனை இருக்காது என்ற சூழ்நிலையில் பின் மீண்டும் ஊரில்  மரம் நடலாம் என்ற பேச்செழுந்தபோது அனைவரும் நடலாம் என்று ஆர்வமுடன் முன்வந்தார்கள். 

எங்கள் பகுதியில் மட்டுமில்லை தமிழகம் முழுவதும் உயிர்வேலிகளை அழித்து கம்பிவேலிகளை அமைத்ததில் நாம் காலி பண்ணிய மரங்களை திரும்ப உண்டுபண்ண  இன்னும்  15  வருடங்களாவது  பிடிக்கும் . மனிதனை போல இந்த சுற்றுசூழலை சீரழித்தது வேறு எந்த உயிரினமும் இருக்க முடியாது. மரங்களின் அவசியத்தை எல்லோரும் உணர ஆரம்பித்தது மட்டுமில்லாமல் வறட்சியின் பிடியில் இருந்து கொஞ்சமேனும் மீளவேண்டும் என்ற ஆர்வம் எல்லோரிடமும் இருந்தது. அந்த ஆர்வம் குறைவதற்குள்  மரங்கள் நட்டுவிட வேண்டும் என்று விநாயகர் சதுர்த்தி அன்று ஏற்பாடு   செய்யப்பட்டது.

எங்கள் ஊரில் எந்த பணி  செய்தாலும்  உருப்படியாக செய்யவேண்டும் என்று நினைப்பார்கள் .  மரக்கன்றுகளுக்கு  சொட்டுநீர்  அமைத்து  கன்றுகளை பாதுகாக்க வலைகள் அமைக்க  முடிவு  செய்தொம் .  அதற்கு கொஞ்சம் நிதி அதிகம் தேவைப்பட்டபோது அனைவரும் தாங்களாகவே முன்வந்து நிதியளித்தார்கள்.  பொறுப்புகளை தனியாக பிரித்துக்கொண்டு அனைத்து ஏற்பாடுகளையும் கச்சிதமாக செய்து முடித்தனர்.

மரக்கன்றுகளுக்காக வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு பரமசிவம் அவர்களை அணுகியபோது 250 கன்றுகளை அனுப்பிவைத்தார்.  விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு பூஜை செய்து விட்டு மரக்கன்றுகள் நடும் பணி  ஆரம்பித்தோம்  . 100 நாள் பணியாளர்களை கொண்டு குழிகள் அமைக்கப்பட்டு  தயார்நிலையில் இருந்தது. மரம் நடு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பெண்கள் உணவு சமைத்து பரிமாறினார்கள். இரண்டு நாட்களில் 170 மரக்கன்றுகள் நடப்பட்டது  சொட்டுநீர் மற்றும் , கூண்டுகள் அமைக்கும் பணியும் நிறைவடைந்தது. 






இது பற்றிய செய்திக்குறிப்பு  நியூஸ்7 தொலைக்காட்சியில் வந்தது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

இதில் வேடிக்கை  என்னவென்றால்  இயற்க்கையின் கருணையில் இந்த வருடம் பெய்த  வெப்பசலன மழை எங்கள் பகுதிக்கு சிறப்பான மழையை தந்து சென்றது. இது நாள் வரை பெரிதாக கன்றுகளுக்கு  தண்ணீர் விட வேண்டிய அவசியமே  வரவில்லை.  அப்போது நட்ட பூவரசன் , புளிய மரக்கன்றுகள் வலையை தாண்டி உயரமாக வளர்ந்திருக்கிறது. 

அதன் தொடர்ச்சியாக பக்கத்து ஊரான அய்யம்பட்டியிலும் மரக்கன்றுகள் நடப்பட்டது. R .வெள்ளோடு  கிராம அளவில் இளைஞர்களிடைய ஒரு புரிதலை கொண்டுவந்தது.  வறட்சியால் அழிந்துகொண்டிருக்கும் விவசாயத்தை மேம்படுத்த அனைவரும் இணைந்து செயல்படுவது என்று முடிவு செய்தோம். அப்போதுதான் திண்டுக்கல் மாவட்ட வேளாண் அதிகாரி திரு.X .பிரிட்டோராஜ் அவர்களின் தொடர்பு கிடைத்தது. அவர் நீர்மேலாண்மை சம்பந்தமாக பல பகுதிகளுக்கு சென்று பயிற்சிவகுப்பு நடத்துவதை அறிந்தோம். எங்கள் பகுதிக்கு பயிற்சியளிக்க  வரமுடியுமா என்று கேட்டபோது மகிழ்வுடன் வர சம்மதித்தார். எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் விவசாய சமூகத்திற்கு நீர்மேலாண்மை தொழில்நுட்பங்களை தமிழ்நாடு முழுவதும் பயணம்  செய்து பயற்சியளித்துக்கொண்டிருக்கிறார். 

2017 அக்டோபர் 21ஆம்  தேதி  அன்று R.வெள்ளோட்டில் ஒரு திருமண மண்டபத்தில் "நீர்மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம்" என்ற தலைப்பில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தோம். அப்போதுதான் கிராம அளவில் அனைவரும் ஒன்றிணைந்து இயங்க வானம்பாடி என்ற ஒரு அமைப்பை உருவாக்கினோம். 
எங்கள் பகுதியில்  இயற்கை விவசாயதில் முன்னோடிகளாக இருக்கும் திரு.பிரதீப்குமார் ரங்கமலை ஆர்கானிக் பார்ம்ஸ் மற்றும் திருமதி.சரோஜாகுமார் அவர்களையும் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்திருந்தோம். மற்றும் எங்கள்பகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு பரமசிவம் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் ஒரு இயற்கை ஆர்வலர் என்ற முறையில்தான் அழைப்பு விடுத்திருந்தோம்.  

நிகழ்ச்சியன்று நாங்கள் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வேடசந்தூர் சட்டமன்ற  உறுப்பினர் திரு.பரமசிவம் கலந்து கொண்டு சிறப்பித்தார். நீர்மேலாண்மை என்ற புத்தகத்தின் ஆசிரியர் திரு.பெருமாங்குப்பம் சம்பத்து அவர்கள் கலந்துகொண்டு பேசினார். திரு.X.பிரிட்டோராஜ் அவர்கள் பள்ளி குழந்தைகளுக்கு பாடம் எடுப்பதுபோல் நீர்மேலாண்மை நுட்பங்களை  விவசாயிகளுக்கு  விளக்கினார்.    200 க்கும் மேற்கொண்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். உண்மையில் இந்த நிகழ்ச்சி எங்கள் பகுதி விவசாயிகளிடையே நீர்மேலாண்மை பற்றிய பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது என்று சொன்னால் அது மிகையில்லை. 


திரு .X .பிரிட்டோராஜ்


திரு.பரமசிவம் MLA வேடசந்தூர் 

திரு .பிரதீப்குமார் 
திருமதி .சரோஜாகுமார் 


வானம்பாடி குழு 



அதன்பிறகு   விவசாய மானியங்கள் , இயற்கை விவசாயம், மரம்வளர்ப்பு மற்றும் சொட்டுநீர் பாசனம் தொடர்பான நிறைய விவசாயம் சார்ந்த உரையாடல்களை கேட்க முடிந்தது. கொஞ்சபேர் உடனடியாக பண்ணைக்குட்டைகளும் அமைத்தார்கள். 

எங்கள் ஊர் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்திருப்பதால் இரு மாவட்ட விவசாயிகளும் பயிற்சியில் கலந்து கொண்டார்கள். அதில் கலந்துகொண்ட நண்பர்கள் சிலர் கரூர் மாவட்டம் ஈசநத்தம் பகுதியில் வரும்  பொங்கல் பண்டிகையின் போது(13/Jan/2018) இதே போன்றதொரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். வேளாண் அதிகாரி திரு.பிரிட்டோராஜ் அவர்கள் கலந்துகொண்டு பயிற்சியளிக்க இசைந்துள்ளார்.

இந்த பயிற்சியையும் வானம்பாடி அமைப்பு தான் ஏற்பாடு செய்துகொண்டு இருக்கிறது. அதாவது வானம்பாடி என்ற  பெயரில் ஒன்றிணைந்து இருமாவட்டங்களிலும்   விவசாய  சம்பந்தமான பணிகளை முன்னெடுத்து செல்லலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

வானம்பாடிக்கு சிறகுகள் முளைக்க ஆரம்பித்திருக்கிறது. இனி அது வானில் சிறகடித்து பறக்கும்.   

-பா.பாலகுமார் 
பொன்னம்பட்டி 


நினைவுகள்!!



ஒருவன் தான் வளர்ந்த ஊரையும், வீட்டையும், நண்பர்களையும் விட்டு பிரிவது என்பது ஒரு தாங்க முடியாத வலி. நானும் அந்த வலியை கடந்து வந்திருக்கிறேன். அதன் நினைவுகள் தான் இங்கே கவிதையானது.

நான் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போது, சூழல் காரணமாக எங்கள் வீட்டையும் , நிலத்தையும் விற்றுவிட்டு புலம் பெயர்ந்தோம்.

கல்லூரி இறுதியாண்டு திட்டப்பணிக்காக (Project Work ) திருச்சி விடுதியில் தங்கியிருந்தபோது எழுதியது.

1999-இல் எழுதிய இந்த கவிதையில் எந்த திருத்தமும் இல்லாமல் உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.







பௌர்ணமி இரவு


நிலவொளியில் நடந்தேன் .


எங்கும் நிசப்தம் என் மனதை தவிர


கால்கள் புற்களில் பதிந்து முன்னேற


மனம் மட்டும் ஏனோ பின்னோக்கி பார்த்தது


நான் கிட்டி விளையாண்ட குளக்கரை மரங்கள் குனிந்திருந்தன .


நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடிய ஊர் மந்தை


விடிய விடிய உட்கார்ந்து அரட்டை அடித்த தண்ணீர் தொட்டி


அதில் கடைசியாய் உட்கார்ந்து பார்த்தேன் ...


மரங்களிடையே ஒளிந்திருந்த என் பள்ளிக்கூடம்


கடைசியாய் அதன் திண்ணையில் நடைபயின்றேன் .


என் பற்களை பாதுகாத்த வேப்பமரம்


பாசத்துடன் தொட்டு பார்த்தேன் .


ஆடு மேய்த்த தரிசல் நிலம்


கண்களால் அரவணைத்தேன் .


படிக்க சென்ற தென்னந்தோப்பு


மௌனம் காத்து பிரிவை சொல்லியது.


நீண்ட நேரம் நடந்திருப்பேன் .


நிலவு தேய்ந்து என் நினைவுகள் தேயப்போவதை சொல்லியது


வீடு வந்தேன் ....


ஒவ்வொரு அறையாக சென்று தொட்டு பார்த்தேன்


இருபது ஆண்டுகளாக என்னை வளர்த்த வீடு ..


துக்கத்துடன் தைரியம் சொல்லும் நண்பர்கள்.


"அடிக்கடி வந்திட்டு போப்பா " என் நண்பனின் அம்மா..


அனைத்தையும் கண்களால் பருகிவிட்டு மெதுவாய் நகர்ந்தேன் .


என் தங்கை அருகில் வந்தாள் தேக்கி வைத்த கண்ணீரோடு ..


எப்போதும் போல் "லெட்டர் போடுங்கண்ணா" என்றாள் .


அனைவர்க்கும் விடை சொல்லி ஊர் எல்லை தாண்டியபோது


கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் என் காலில் பட்டு தெரித்தது .....



-நினைவுகளுடன் -

பா.பாலகுமார்

03-02-1999 1.00 AM





வாழையுடன் ஒரு பயணம்

கடந்த ஒரு வருடமாக வாழையுடன் இணைந்து பணியாற்றிகொண்டிருக்கிறேன்.  மிக திருப்தியாகவும் பெருமையாகவும் உணரமுடிகிறது.  

முதலில் வாழை பற்றி ஒரு சின்ன அறிமுகம். வாழ்க்கையில் முட்டி மோதி வெற்றிகண்ட சில முதல் தலைமுறை மாணவர்களால் உதயமானதுதான் வாழை என்ற தன்னார்வ அமைப்பு. 
கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களாய் விழுப்புரம்  மற்றும்  தர்மபுரி மாவட்டங்களில்  வறுமையின் காரணமாகமும் அறியாமையின் காரணமாகவும் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி வேலைக்கு அனுப்பப்படும் சிறார்களையும் , பால்ய விவாகத்திற்கு உள்ளாகும் சிறுமிகளையும்,  முதல் தலைமுறையாய் பள்ளிக்கூடத்தை பார்க்கும் குழந்தைகளையும்  தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குறைந்த பட்சம் அடிப்படை கல்வி கிடைக்கும் வரையிலும்அதிகபட்சமாக அவர்கள் ஆசைப்படும் வரையிலும் வழிகாட்டி கொண்டிருக்கிறது வாழை.  
இப்போது 300க்கும் அதிகமான உறுப்பினர்களோடும் 500 க்கும் மேலான ஆதரவாளர்களுடனும் சென்னையிலிருந்தும் பெங்களூரில் இருந்தும் இயங்கி கொண்டிருக்கிறது.
நாம்  இந்த சமூகத்துக்கு  ஏதாவது திருப்பி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்த போதெல்லாம் , நாம் என்ன பெரிதாக சாதித்து விட்டோம். இதற்கெல்லாம் இன்னும் காலம் இருக்கிறது  என்று  தோன்றியது உண்மைதான். ஆனால் வாழையுடன் இணைந்தது பணியாற்ற தொடங்கியதும்  இத்தனை நாட்களை வீணடித்து விட்டோமே என்று தோன்றியது. 
உண்மையில் நாம் இப்போது  எந்த நிலையில் இருந்தாலும், நாம் கை கொடுத்து தூக்கிவிட நிறைய கரங்கள் காத்து கொண்டேதான் இருக்கின்றன.  நம்மில் பலரும் வாழ்வின் வெவ்வேறு சந்தர்பங்களில் யாரோ ஒருவரின் கரம் பற்றி  மேலே வந்திருப்போம். வழிகாட்டுதலுக்கு காத்திருக்கும் கரங்களையும், இந்த சமூகத்திற்கு ஏதாவது திருப்பி கொடுக்க நினைக்கும் கரங்களையும்  இணைக்கும் பணியையும் அதற்கான களத்தையும்  ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது வாழை.
வாழையின் வழியாக நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் இதுதான். நாம் என்னவெல்லாம் பெற்றிருக்கிறோமோ அவை எல்லாமே இந்த சமூகத்திலிருந்து எடுத்துகொள்ளபட்டதுதான். இந்த பிரபஞ்சம் தோன்றியபோது ஏழை , செல்வந்தன், படித்தவன் , படிக்காதவன் என்று   எந்த ஏற்றத்தாழ்வுகளும் இருந்திருக்க வாய்ப்பில்லை. காலபோக்கில் சாமார்த்தியம், தந்திரம், திறமை,  வாய்ப்பு , குரோதம் , பொறாமை , பகைமை , துரோகம் இன்னும் பல குணங்கள் மனிதனுள் வளர்ந்து இந்த உலகத்தை தலைகீழாக புரட்டி போட்டு விட்டது. இந்த ஏற்றதாழ்வுகள்  எல்லாம்  நல்லவைகளும்  , கெட்டவைகளும்  இணைந்தே சாத்தியமாகியிருக்கிறது.
இப்படி மாறிப்போன உலகை கொஞ்சமேனும் சமநிலைபடுத்தும் முயற்சியில் தான் வாழை இயங்கிகொண்டிருக்கிறது. 
இந்த முயற்சியில் வாழை எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறது என்று கேட்டால் பதில் தேடுவது சிரமமாகத்தான் இருக்கும். கண்டிப்பாக பல மாணவர்கள் அடிப்படை கல்வி  மற்றும் அதற்கும் மேலாக பயின்று நல்லவிதமாக வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வாழை உதவியிருந்தாலும் இந்த சமுதாயத்தை சீர்படுத்தும் முயற்சியில் எந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறது என்று கேட்டால் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கும். ஏனென்றால் இதை அளவிடுவது கடினம்.
ஆனால்  கடந்த மாதம் விழுப்புரம் எரியூரில் நடந்த பயிற்சிப்பட்டறையில் இதற்கான விடையும்  கிடைத்தது.  அப்போது வாழை மாணவர்களின் பெற்றோர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யபட்டிந்தது. அதில் ஒரு மாணவியின் தந்தை சொன்ன  அனுபவத்தில் தான் அதற்கான பதில் ஒளிந்திருந்தது.
"எனக்கு  இப்போது வயது 37 ஆகிறது. 17 வயதில் திருமணம் செய்து வைத்தார்கள். அப்போது என் மனைவிக்கு  13 வயது. வாழ்க்கையை எப்படி தொடங்குவது என்று தெரியாமல் விழி பிதுங்கி பல  துன்பங்களுக்கு உள்ளானேன்.  எனக்கு மூன்று பெண்குழந்தைகளும் ஒரு பையனும் இருக்கிறார்கள். முதல் பெண் வாழை மாணவியாகி இப்போது ஒன்பதாம் வகுப்பில்."
மேலும் அவர் சொன்னது "வாழை என் குழந்தையின் வாழ்க்கையில் மட்டும் மாற்றத்தை கொண்டுவரவில்லை. என் வாழ்க்கையிலும் பெரிய மாற்றத்தை தந்திருக்கிறது" என்று அவர் சொன்னது இதுதான்.
*நான் எப்படி குழந்தைகளிடம் பேச வேண்டும் , நடந்துகொள்ள வேண்டும் என்பதை கற்றுகொடுத்திருக்கிறது வாழை.
*மூன்று பெண் குழந்தைகள் இருந்தாலும் எல்லோரையும் அவர்கள் ஆசைப்படும் வரை படிக்க வைப்பேன்.
*என் குழந்தைகளுக்கு சிறு வயதில் திருமணம் செய்து வைத்து நான்  பட்ட துன்பத்தை அவர்களுக்கு தர மாட்டேன். 

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இருந்தது அவரின் பேச்சு. இதுதான் வாழையின் வெற்றி என்று நாங்கள் உணர்ந்த தருணம் அது.  

 
அடுத்த வருடத்திற்கான வாழை மாணவர்களுக்கு வழிகாட்டிகளை தேர்ந்தெடுக்க அறிமுக நிகழ்வுகளை பெங்களூரில் நடத்திகொண்டிருக்கிறது வாழை . நீங்களும் வாழையில் இணைய விரும்பினால்  www.vazhai.org  என்ற இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள் அல்லது 8123986750 , 9962284228 என்ற அலைபேசி எண்களில்  தொடர்புகொள்ளுங்கள்.
வரும்  ஞாயிற்றுகிழமை(13-Apr -2014) பெங்களூர் தமிழ் சங்கத்தில் நடைபெறும் வாழை அறிமுக நிகழ்வில் சந்திப்போம்.
வாருங்கள் நம் வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் அர்த்தமுள்ளதாக்கிக் கொள்வோம்.