நினைவுகள்!!



ஒருவன் தான் வளர்ந்த ஊரையும், வீட்டையும், நண்பர்களையும் விட்டு பிரிவது என்பது ஒரு தாங்க முடியாத வலி. நானும் அந்த வலியை கடந்து வந்திருக்கிறேன். அதன் நினைவுகள் தான் இங்கே கவிதையானது.

நான் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போது, சூழல் காரணமாக எங்கள் வீட்டையும் , நிலத்தையும் விற்றுவிட்டு புலம் பெயர்ந்தோம்.

கல்லூரி இறுதியாண்டு திட்டப்பணிக்காக (Project Work ) திருச்சி விடுதியில் தங்கியிருந்தபோது எழுதியது.

1999-இல் எழுதிய இந்த கவிதையில் எந்த திருத்தமும் இல்லாமல் உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.







பௌர்ணமி இரவு


நிலவொளியில் நடந்தேன் .


எங்கும் நிசப்தம் என் மனதை தவிர


கால்கள் புற்களில் பதிந்து முன்னேற


மனம் மட்டும் ஏனோ பின்னோக்கி பார்த்தது


நான் கிட்டி விளையாண்ட குளக்கரை மரங்கள் குனிந்திருந்தன .


நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடிய ஊர் மந்தை


விடிய விடிய உட்கார்ந்து அரட்டை அடித்த தண்ணீர் தொட்டி


அதில் கடைசியாய் உட்கார்ந்து பார்த்தேன் ...


மரங்களிடையே ஒளிந்திருந்த என் பள்ளிக்கூடம்


கடைசியாய் அதன் திண்ணையில் நடைபயின்றேன் .


என் பற்களை பாதுகாத்த வேப்பமரம்


பாசத்துடன் தொட்டு பார்த்தேன் .


ஆடு மேய்த்த தரிசல் நிலம்


கண்களால் அரவணைத்தேன் .


படிக்க சென்ற தென்னந்தோப்பு


மௌனம் காத்து பிரிவை சொல்லியது.


நீண்ட நேரம் நடந்திருப்பேன் .


நிலவு தேய்ந்து என் நினைவுகள் தேயப்போவதை சொல்லியது


வீடு வந்தேன் ....


ஒவ்வொரு அறையாக சென்று தொட்டு பார்த்தேன்


இருபது ஆண்டுகளாக என்னை வளர்த்த வீடு ..


துக்கத்துடன் தைரியம் சொல்லும் நண்பர்கள்.


"அடிக்கடி வந்திட்டு போப்பா " என் நண்பனின் அம்மா..


அனைத்தையும் கண்களால் பருகிவிட்டு மெதுவாய் நகர்ந்தேன் .


என் தங்கை அருகில் வந்தாள் தேக்கி வைத்த கண்ணீரோடு ..


எப்போதும் போல் "லெட்டர் போடுங்கண்ணா" என்றாள் .


அனைவர்க்கும் விடை சொல்லி ஊர் எல்லை தாண்டியபோது


கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் என் காலில் பட்டு தெரித்தது .....



-நினைவுகளுடன் -

பா.பாலகுமார்

03-02-1999 1.00 AM





3 comments :

Yaathoramani.blogspot.com said...

படிப்பவர்கள் மனதினிலும் இது போன்று
இழ்ந்த சொர்க்கம் குறித்த
நினைவுகளைக் கீறிப்போகும்
அருமையான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்...

பா.பாலகுமார் said...

உங்களுக்கு எனது நன்றிகள் ரமணி..

Anonymous said...

நீ எழுதிய வரிகளில் பிடித்தது நிலவு தேய்ந்து என் நினைவுகள் தேயப்போவதை சொல்லியது
வீடு வந்தேன் ....

Post a Comment