டாக்டர் V .P .B .பரமசிவம் அவர்களை அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கலாம் என்று எங்களிடம் சொன்னார். எங்களின் அழைப்பை ஏற்றுக்கொண்டு அந்நிகழ்ச்சிக்கு திரு.பரமசிவம் வந்திருந்தார். அப்போதுதான் அவர் எனக்கு முதன் முதலாக அறிமுகம்.
அவருடைய தந்தையார் திரு V P .பாலசுப்ரமணியம் துணைசபாநாயகராக இருந்தபோது நான் சிறுவன். அவர் எங்கள் ஊரில் இந்திரா குடியிருப்பை திறந்துவைப்பதற்காக வந்தது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. ஒரு பத்து பதினைந்து கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நின்றபின் ஒரு காரில் இருந்து இறங்கி அவர் அந்த குடியிருப்பை திறந்து வைத்து பேசினார்.
அவருடைய புதல்வர் தற்போது சட்டமன்ற உறுப்பினர். கொஞ்சம் எங்களுக்கு பதட்டமாக தான் இருந்தது. ஆனால் திரு.பரமசிவம் அவர்கள் எங்கள் நிகழ்ச்சிக்கு மிக எளிமையாக வந்து கலந்து கொண்டார். அவருடைய கட்சிக்காரர்களுக்கு கூட அவர் வருவது தெரிந்திருக்கவில்லை. சுற்றுசூழல் மற்றும் வேளாண்மை சார்ந்த எங்களுடைய முன்னெடுப்புகளை வெகுவாக பாராட்டினார்.
அப்போதிருந்து இன்றுவரை வானம்பாடி பசுமை இயக்கம் முன்னெடுத்த அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருந்திருக்கிறார். அதிகாரிகளின் துணையோடு நம் பகுதிகளில் விவசாய நிலங்களில் பண்ணை குட்டைகள் அமைத்தபோது ஒரு ஐந்து பண்ணைக்குட்டைகள் தான் அமைக்க முடியும் என்று அதிகாரிகள் சொன்னார்கள். ஒரு பதினைந்து குட்டைகளாவது இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து இவரை தொடர்பு கொண்டு உதவி கேட்டோம்.
எங்கள் வானம்பாடி உறுப்பினர்களை அவரது இல்லத்திற்கு வரவழைத்து வேளாண் பொறியியல்துறைக்கு ஒரு பரிந்துரை கடிதத்தை எழுதி கையில் கொடுத்தார். அவர்கள் அங்கிருந்த போதே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து எங்கள் பகுதியின் வறட்சி நிலையை விளக்கி பண்ணைக்குட்டைகள் அதிகப்படுத்தி கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரின் உதவியுடன் கிட்டத்தட்ட 25 பண்ணைக்குட்டைகள் R வெள்ளோடு கிராமங்களை சுற்றிலும் அமைத்தோம்.
2019 ஜனவரியில் வானம்பாடிக்கு R .வெள்ளோட்டில் ஒரு அலுவலகமும் இயற்கை அங்காடியும் திறக்க முடிவு செய்து அவரை திறப்பு விழாவிற்கு அழைத்திருந்தோம். அன்றும் கலந்துகொண்டு வானம்பாடி போன்ற அமைப்புகளின் அவசியத்தை கலந்துகொண்டவர்கள் மத்தியில் விளக்கினார்.
ஊருக்கு அருகில் அமையவிருந்த ஒரு கிரானைட் குவாரியினை கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து கிராம சபை தீர்மானம் மூலம் நிறுத்த முயற்சிசெய்த போது வட்டார வளர்ச்சி அலுவலர் அதை தீர்மானமாக எழுத முன்வரவில்லை. திரு.பரமசிவம் அவர்களை அனுகியதும் சம்பந்தபட்ட அலுவலரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தீர்மானத்தை பதிவு செய்ய வலியுறுத்தினார். அதன்பிறகு பக்கத்து கிராமங்களிலும் அதையே தீர்மானமாக முன்மொழிந்து அந்த பகுதியில் குவாரி வருவது தடுக்கப்பட்டது.
ஒருமுறை வேடந்தூருக்கு அவரை சந்திக்க அழைத்திருந்தார். நாங்கள் சென்றபோது அவரது தந்தையின் நினைவாக வேடசந்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்திருந்தார். நல்ல கூட்டம் இருந்தது. தூரத்தில் இருந்து சைகையில் கொஞ்சநேரம் எங்களை அமரச்சொன்னார். அவரும் மருத்துவர் என்பதால் இது போன்ற மருத்துவ முகாம்களை அவர் MLA ஆகும் முன்பிருந்தே நடத்தி வந்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து நாங்கள் அவரை சந்தித்தோம்.
எங்களுடன் அவர் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு நடுத்தர வயது பெரியவர் அவரின் தோளை தட்டி "துரை இந்த ரிப்போர்ட்டை கொஞ்சம் பார்த்து சொல்லு" என்று ஒருமையில் சொன்னார். சிறுவயதில் இருந்து அவர் பழகியிருக்க கூடும் என புரிந்தது. இவர் சிறிதும் தாமதிக்காமல் அவர் கொடுத்த ரிப்போர்ட்டை பார்த்துவிட்டு மருத்துவர் ஒருவர் அமர்ந்திருக்கும் அறையை நோக்கி கையை நீட்டி இப்படி சொன்னார் "அய்யா அந்த ரூமுக்கு போங்க. அந்த டாக்டர் கலைஞர் கருணாநிதிக்கு வைத்தியம் பார்க்கும் காவேரி ஆஸ்பிட்டலிலிருந்து வந்திருக்கிறார். நன்றாக பார்ப்பார்." என்று நிதானமாக சொன்னார். அவர் எல்லோரிடத்திலும் இனிமையாக பழக கூடியவர் என்பது சொல்லாமல் புரிந்தது.
கட்சி அரசியல்கள் கடந்து நல்ல பண்பாளர் ஒருவரை நாம் ஏன் நமக்கான பிரதிநிதியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விளக்குவதற்காகவே மேலே சொல்லியிருக்கும் அத்தனை உதாரணங்களும்.
நான் பார்த்த வரையில் உள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் முதல் நாடாளும் அமைச்சர்கள் வரை சாதாரண மக்கள் எளிதில் அணுக முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். அந்த வகையில் திரு.பரமசிவம் அவர்கள் எளிதில் அணுக கூடியவராகவே எப்போதும் இருந்திருக்கிறார். இப்போதும் இருக்கிறார்.
எனது தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் கொள்கைகள் பற்றி என்னுடன் பழகியவர்களுக்கு தெரிந்திருக்கும். உண்மையில் என் வாழ்நாளில் இதுவரை ஒருமுறைகூட அவர் சார்ந்திருக்கும் கட்சிக்கு வாக்களித்ததில்லை.
முதல் முறையாக கட்சி அரசியல் தாண்டி என்னை யோசிக்க வைத்தவர் திரு.பரமசிவம் அவர்கள் தான் .
அவர் சார்ந்திருக்கும் கட்சி ஆட்சியில் அமர்ந்தாலும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தாலும் திரு.பரமசிவம் போன்றவர்கள் நம் பிரதிநிதிகளாக இருப்பது ஊருக்கும் நாட்டிற்கும் நல்லது.
பாலகுமார்
R.வெள்ளோடு
3 comments :
அருமை பாலா 👌👌👌.கிராம சபையின் power என்ன என்று இந்த கட்டுரையை படிக்கும் அனைவருக்கும் புரியும். வளர்க வானம்பாடி 👍👍👍.
அருமை பாலா ������. கிராம சபையின் power என்ன என்று இந்த கட்டுரையை படிக்கும் அனைவருக்கும் புரியும். வளர்க வானம்பாடி ������.
புவனேஸ்வரன்.
Superr
Post a Comment