இரா.சின்னதுரை எழுதிய குடகனாறு நாவலை இன்று தான் வாசித்து முடித்தேன். வாசிப்பு பழக்கமே முழுவதும் குறைந்து விட்டது. புத்தகங்கள் ஆசைபட்டு வாங்கி அலமாரியில் அடுக்குவதோடு சரி . எடுத்து படிப்பதில்லை. இந்த நாவலின் கதைக்களம் எனது ஊர் என்பதால் இயல்பாகவே ஆர்வம் தொற்றிக்கொண்டது.
அதோடில்லாமல் இந்த நாவலாசிரியர் திரு.இரா.சின்னத்துரை அவர்களுக்கு இந்த நாவலுக்கான தகவல்களை திரட்ட நானும் அனில் போல உதவியிருக்கிறேன் என்பதை அவர் மூலம் அறிந்து மகிழ்ந்தேன்.
குடகனாறு என்று தலைப்பிட்டு 1977 ஆம் ஆண்டு பெருவெள்ளத்தின் கோர நிகழ்வுகளை ஒரு அழகான கவித்துவமான காதலினூடே சொல்லியிருக்கிறார். வேடசந்தூர் பகுதி வாழ் மக்களின் வழிபாட்டு முறைகள் , சடங்குகளை மிக நேர்த்தியாக கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்
ஒரு இனிமையான காதல் கதையை அவர் விவரிக்கும் மொழிநடை, குடகனாறு ஆற்றுப்படுகையில் நாமும் அவருடனே பயணம் செயத அனுபவத்தை கொடுக்கிறது என்றால் அது மிகையில்லை.
அந்த பகுதி மக்களின் பேச்சுமொழியில் இந்த கதையை சொல்லவேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார் அல்லது அவரது வாழ்வும் இப்படியாகத்தான் இருந்தது என்று அறிகிறேன். அப்படி அந்த பேச்சு மொழியில் விவரிக்கும்போது அந்த சொல்லிற்கான சரியான தமிழ் சொல்லையும் கொடுத்திருக்கிறார்.
உதாரணமாக வடகயிறு(பெரிய கயிறு), செத்தை (குப்பை), தப்பு (பறை) , தாசா (கழுத்திலிருந்து கயிறு கட்டி வயிற்றுபகுதி யின் மீது கிடத்தி இரண்டு கோல் கொண்டு அடிக்கப்படும் தோல் கருவி) என்று கதை நெடுகிலும் விளக்கங்கள் கொடுத்திருக்கிறார்.
இந்த கதையில் வரும் பெண் பாத்திரங்கள் அனைவரையும் பெருமதிப்பிற்குரியவர்களாகவும், தைரியமானவர்களாகவும் படைத்திருக்கிறார்.
இந்த கதையில் வரும் மல்லிகா மற்றும் செல்லப்பிள்ளை இருவரும் நம் மனதில் பதிந்துவிடுகிறார்கள். குலதெய்வ வழிபாடு எப்படி ஆரம்பித்திருக்கலாம் என்பதற்கு பதில் இந்த கதையில் ஒளிந்திருக்கிறது.
இந்த புத்தகம் என்னைப்போலவே அனைவருக்கும் நிறைவான வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
பெரிய பதிப்பகத்தில் இருந்து வெளியிடப்படும் புத்தகங்களுக்க்கே இங்கு வெளிச்சம் கிடைக்கிறது. இதுபோல சில நல்ல புதினங்கள் மக்களை சென்றடைவதில்லை. நிச்சயம் குடகனாறு அனைவரும் வாசிக்கவேண்டிய புத்தகம். பள்ளி நூலங்களில் சேர்க்கப்பட வேண்டிய புத்தகம்.
இந்த நூலாசிரியர் திரு.சின்னதுரை அவர்கள் இது போல இன்னும் நிறைய படைப்புகளை வழங்கி தமிழ் இலக்கிய வட்டத்தில் நீங்கா இடம்பெற எனது மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.
இந்த புத்தகம் வாசிக்க விரும்புவோர் கீழ்கண்ட முகவரியில் ஆசிரியரை தொடர்புகொண்டு நூலினை பெற்றுக்கொள்ளலாம்.
இரா.சின்னத்துரை
கதவு எண் 72, நான்காவது தெரு,
கிராப்பட்டி,
திருச்சி - 620012
தொலைபேசி எண் 9443144043
குடகனாறு நாவலை ஆன்லைனில் வாங்க பனுவல் புத்தகநிலைய இணைப்பு கீழே
https://www.panuval.com/kutakanaru-10028488
தொடர்வோம்...
பா.பாலகுமார்



0 comments :
Post a Comment